எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை - தமிழக அரசு அனுமதி
அதிமுக பொது செயலாளரும், தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான லஞ்சஒழிப்புத்துறை விசாரணைக்கு தமிழகஅரசு அனுமதி அளித்துள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளது. அதிமுக ஆட்சியில் இருந்த காலகட்டத்தில் கிருஷ்ணகிரி, திருவள்ளூர், அரியலூர் உள்பட 11 மாவட்டங்களில் தலா 150 மாணவர்கள் படிக்கும் வகையில் ரூ.4 ஆயிரத்து 80 கோடி செலவில் மருத்துவ கல்லூரிகள் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த கல்லூரி கட்டிடங்கள் தேசிய மருத்துவ ஆணையத்தின் விதிகளின்படி அமைக்கப்படவில்லை. மேலும் இந்த கட்டிடங்களை கட்டியதில் பெரும் ஊழல் நடந்துள்ளது என்று புகார்கள் எழுந்தது. இதன்படி அப்போது பொதுப்பணித்துறை உள்ளிட்ட துறைகளை கவனித்துவந்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் ஆகியோர் இந்த ஊழலில் ஈடுபட்டுள்ளதாகவும் புகாரில் குறிப்பிடப்பட்டிருந்தது.
சாட்சியங்கள் மற்றும் ஆதாரங்கள் அடிப்படையில் நடவடிக்கை
இந்நிலையில், எடப்பாடி பழனிச்சாமி தற்போது எதிர்க்கட்சி தலைவராக உள்ளதால் அவரிடம் இந்த லஞ்ச புகார் குறித்து விசாரிக்க லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தரப்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் தமிழக அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது என்று கூறப்படுகிறது. இந்த கோரிக்கையினை ஏற்ற தமிழக அரசு, எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க அனுமதி வழங்கியுள்ளது. தொடர்ந்து தற்போது இது குறித்த விசாரணையினை சிறப்பு புலனாய்வு குழுவிடம் ஒப்படைக்க லஞ்ச ஒழிப்புத்துறை முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. மேலும் இது குறித்து எடப்பாடி பழனிசாமிக்கு சம்மன் அளிக்கப்பட்டு விசாரணை துவங்கும் என்று கூறப்படுகிறது. சாட்சியங்கள் மற்றும் ஆவணங்களை ஆராய்ந்த பின்னர் அதன் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.