Loading...
சார்பதிவாளர் அலுவலகங்களில் இனி சனிக்கிழமை விடுமுறை; பொதுமக்கள் வீடே தேடி வரும் டிஜிட்டல் சான்றிதழ்கள்
சார்பதிவாளர் அலுவலகங்களில் இனி சனிக்கிழமை விடுமுறை

சார்பதிவாளர் அலுவலகங்களில் இனி சனிக்கிழமை விடுமுறை; பொதுமக்கள் வீடே தேடி வரும் டிஜிட்டல் சான்றிதழ்கள்

எழுதியவர் Venkatalakshmi V
Sep 07, 2026
02:20 pm

செய்தி முன்னோட்டம்

தமிழக சட்டமன்றத்தில் வணிக வரி மற்றும் பதிவுத் துறை தொடர்பான மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில், பொதுமக்களின் வசதிக்காகவும் நிர்வாகச் சீர்திருத்தங்களுக்காகவும் பல்வேறு முக்கியப் புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி பொதுமக்களுக்கு மேம்பட்ட சேவைகளை விரைவாக வழங்கவும், குறிப்பிட்ட சார்பதிவகங்களில் நிலவும் பணிப்பளுவை பகிர்ந்தளிக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதன்படி, ஒரு வருவாய் கிராமம் முழுமையாக ஒரே சார்பதிவக எல்லைக்குள் அமைவதை உறுதி செய்யும் வகையில் ஆட்சி எல்லைகள் மறுசீரமைக்கப்பட உள்ளன. இந்த மாற்றங்கள் வரும் செப்டம்பர் 15 முதல் நடைமுறைக்கு வரும்.

பதிவு முறை

வருகையில்லா மற்றும் காகிதமற்ற பதிவு முறை

15.09.2026 முதல், வங்கி மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களில் கடன் பெறும்போது வழங்கப்படும் உரிமை ஆவணங்கள் ஒப்படைப்பு (MOD) மற்றும் ரசீது ஆவணங்கள், நேரில் வராமலேயே இணையவழியில் பதிவு செய்யும் 'வருகையில்லா ஆவணப் பதிவு முறை' கட்டாயமாக்கப்படுகிறது.

நான்கு வகையான குடும்ப ஏற்பாடு ஆவணங்களைக் காகிதமற்ற முறையில் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டு, நகல்கள் இணையவழியிலேயே அனுப்பி வைக்கப்படும்.

2018-ஆம் ஆண்டு முதல் பதிவு செய்யப்பட்ட திருமணச் சான்றிதழ்கள், சங்கங்கள்/சீட்டுப் பதிவு சான்றிதழ்கள், பிறப்பு/இறப்புச் சான்றிதழ் நகல்கள் மற்றும் கோர்வை ஆவணங்களின் நகல்கள் ஆகியவற்றை பொதுமக்கள் மின்-செலுத்தல் முறையில் கட்டணம் செலுத்தியவுடன், மையக்கணினிச் சான்றிதழ் (Server Side Certificate) மூலம் நேரடியாக அவர்களின் முகவரிக்கு/மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

லீவு

"100 சார்பதிவாளர் அலுவலகங்களில் சனிக்கிழமை கட்டாயப்பணி ரத்து"

பதிவுத் துறை "எங்கிருந்தும் பதிவு" எனும் இலக்கை நோக்கி அதிவேகமாக நகர்ந்து வரும் சூழலில், சார்பதிவாளர்கள் ஆவணப் பதிவு மட்டுமின்றிப் பல்வேறு கூடுதல் நிர்வாகப் பணிகளையும் மேற்கொள்ள வேண்டியுள்ளது.

எதிர்காலத்தில் பெரும்பாலான சேவைகள் வருகையில்லா மற்றும் காகிதமில்லா முறையில் மாற்றப்பட உள்ளதால், சேவைகளின் தரத்தை பராமரிக்கவும் அலுவலர்களின் பணிச்சுமையை குறைக்கவும் தற்போது சனிக்கிழமைகளில் செயல்பட்டு வரும் 100 சார்பதிவாளர் அலுவலகங்கள் இனி வார நாட்களில் மட்டுமே செயல்படும் என்றும், சனிக்கிழமை கட்டாயப் பணிமுறை கைவிடப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT