அதிரடியாக குறைந்த வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை
செய்தி முன்னோட்டம்
ஒவ்வொரு மாதம் முதல் நாளிலும் வீடு மற்றும் வணிகம் பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலையினை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்து வருவதினை வழக்கமாக கொண்டுள்ளது.
அதன்படி, இன்று(செப்டம்பர்.,1) சமையல் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை விவரங்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், உணவகங்கள், தேநீர் கடைகள் போன்றவற்றில் பயன்படுத்தப்படும் வணிக எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.157.50 குறைந்துள்ளது என்று எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து சென்னையில் 19 கிலோ எடைகொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் ரூ.1,852.50க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், இன்று முதல் ரூ.1,695க்கு விற்பனை செய்யப்படும் என்று கூறப்படுகிறது.
விலை
தொடர்ந்து 3வது மாதத்திலும் விலை குறைந்த வணிக செயல்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர்
கடந்த ஜூலை மாதம் ரூ.93க்கும், கடந்த மாதம் ரூ.92.50க்கும் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை தொடர்ந்து குறைந்து வந்த நிலையில், இம்மாதம் ரூ.157.50க்கு குறைக்கப்பட்டுள்ளது.
இச்செய்தி வணிகம் செய்வோர், உணவகங்கள் நடத்துவோருக்கு பெரும் மகிழ்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது.
இதனிடையே வீட்டில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையில் எவ்வித விலை மாற்றமும் இல்லாமல் இருந்து வந்தது.
இதனையடுத்து, கடந்த 2 நாட்களுக்கு முன்னர் 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் ரூ.200 குறைக்கப்பட்டதாக செய்திகள் வெளியானது.
இது தொடர்பான முடிவு அண்மையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.