குளிரில் உறையும் டெல்லி; 4.5 டிகிரி செல்சியஸாக குறைந்த வெப்பநிலை
தலைநகர் டெல்லியில் தொடர்ந்து இரண்டாவது நாளாக சராசரி குறைந்தபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸுக்குக் கீழே குறைந்துள்ளது. இந்திய வானிலை ஆய்வுத் மையத்தின் (IMD) படி, தேசிய தலைநகரில் காலை 5.30 மணிக்கு குறைந்தபட்ச வெப்பநிலை 4.5 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. டெல்லியின் சில பகுதிகளில் வெப்பநிலை 4.5 டிகிரி செல்சியஸுக்கும் கீழே சென்றது. பூசாவில் குறைந்தபட்ச வெப்பநிலை 3.5 டிகிரி செல்சியஸாகவும், அயநகரில் குறைந்தபட்ச வெப்பநிலை 4 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியுள்ளது. நஜாப்கரில் குறைந்தபட்ச வெப்பநிலை 6.2 டிகிரி செல்சியஸாக இருந்தது. முன்னதாக டிசம்பர் 15 அன்று, டெல்லி-என்சிஆர் குறைந்தபட்ச வெப்பநிலையாக 4.9 டிகிரி பதிவானது.
வடமாநிலங்களை தாக்கும் குளிர் அலை
வரும் நாட்களில், குளிர் காற்று மற்றும் அதிக ஈரப்பதம் காரணமாக பல்வேறு பகுதிகளில் மேலோட்டமான மூடுபனியுடன் கூடிய குளிர் அலை மேலும் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ஹரியானா மற்றும் மேற்கு உத்தரபிரதேசம் உள்ளிட்ட வட இந்தியாவின் சில மாநிலங்களுக்கு குளிர் அலை எச்சரிக்கையை வானிலை துறை வெளியிட்டுள்ளது. குறைந்தபட்ச வெப்பநிலை 4 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்குக் கீழே குறையும் போது அல்லது இயல்பிலிருந்து 4.5 முதல் 6.4 டிகிரி வரை குறையும் போது, சமவெளிகளில் குளிர் அலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுகிறது.
டெல்லியில் தொடர்ந்து மோசமடையும் காற்றின் தரம்
கடுமையான குளிர் நிலைகளுக்கு மத்தியில், திங்கள்கிழமை சாதகமற்ற வானிலை மற்றும் குறைந்த காற்றின் வேகம் காரணமாக டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் காற்றின் தரம் 'மிகவும் மோசமான' வகைக்கு மோசமடைந்தது. மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் கூற்றுப்படி, திங்கள்கிழமை அதிகாலை 4 மணியளவில் தேசிய தலைநகருக்கான ஒட்டுமொத்த காற்றுத் தரக் குறியீடு (AQI) 334 ஆக பதிவாகியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை மாலை காற்றின் தரம் 'மிகவும் மோசமான' வகைக்கு நழுவியது, AQI 307 ஆக உயர்ந்தது, இது ஒரு மணிநேரத்திற்கு முன்பு 294 ஆக இருந்தது, இது 'மோசமான' பிரிவில் உயர்ந்த நிலையில் இருந்தது.