கோவை கார் குண்டுவெடிப்பு - குற்றப்பத்திரிகையினை தாக்கல் செய்த என்.ஐ.ஏ.
கோவை, உக்கடத்தில் கோட்டையீஸ்வரன் கோயில் வாசலில் கடந்தாண்டு அக்டோபர் மாதம் 23ம்தேதி கார் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தது. இதில் ஜமேஷாமுபின் என்பவர் பலியானார், இதுதொடர்பாக ஜமேஷா முபின் வீட்டில் காவல்துறையினர் சோதனை செய்தனர். அப்போது வெடிப்பொருட்கள், சிலிண்டர் பல பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் இந்த வழக்கின் தீவிரத்தன்மை காரணமாக தேசியப்புலனாய்வு முகமை(NIA) விசாரணைக்கு மாற்றப்பட்டது. இதனையடுத்து ஜமேஷா முபினுடன் தொடர்புடைய முகமது தல்கா, முகமதுஅசாருதீன், அப்சர்கான் உள்ளிட்ட 11பேரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைதுச்செய்தனர். இதனுள் 6 பேர்மீது என்ஐஏ அதிகாரிகள் பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையினை தாக்கல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி இந்த வழக்கில் கைதான முகமதுஅசாருதீன் என்பவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட பென்ட்ரைவில் ஜமேஷாமுபின் பேசிய வீடியோப்பதிவு இருந்துள்ளது.
5 பேரை காவலில் எடுத்து விசாரிக்க மனு
அந்த வீடியோவில், தான் ஒரு தெளலத்-இ-இஸ்லாமியா என்னும் அமைப்பின் உறுப்பினர் என்றும், இஸ்லாமை எதிர்ப்பவர்கள் மீது தற்கொலை தாக்குதல் நடத்தப்போவதாகவும், தனது உயிரிழப்பது பற்றியும் தெரிவித்துள்ளார். மேலும் இலங்கையில் ஈஸ்டர் பண்டிகையின் போது நடத்தப்பட்ட தாக்குதலில் 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதற்கு மூளையாக செயல்பட்டதாக கூறப்படும் ஷாரன் ஹாசிமின் பேச்சுக்களால் தான் ஈர்க்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார். மேலும் இலங்கையில் நடந்தது போல், இந்தியாவிலும் ஒரு தாக்குதலை நடத்த முபின் திட்டமிட்டதும் அதில் கூறப்பட்டுள்ளதாக தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து என்.ஐ.ஏ.அதிகாரிகள் மீதுமுள்ள 5 பேர் மீதும் விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என்று கூறியுள்ளனர். கைதான 5 பேரினை காவலில் எடுத்து விசாரிக்க மனு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.