கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமாவை வலியுறுத்தி ஜூன் 6ல் அபிஜீத் தீப்கே போராட்டம்!
செய்தி முன்னோட்டம்
தேர்வுக் குளறுபடிகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என காக்ரோச் ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் தீப்கே வலியுறுத்தியுள்ளார். இதற்காக அமெரிக்காவில் இருந்து வரும் ஜூன் 6 சனிக்கிழமை அன்று காலை டெல்லி வரும் அவர், அங்குள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் அமைதியான முறையில் போராட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளார். சமூக ஊடகங்கள் மூலம் இளைஞர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள காக்ரோச் ஜனதா கட்சியின் இந்த நேரடிப் போராட்ட அறிவிப்பு தற்பொழுது டெல்லி அரசியல் வட்டாரத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது.
கல்வி அமைச்சர் ராஜினாமா போராட்டம்
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமாவை வலியுறுத்தி ஜூன் 6ல் போராட்டம்
நீட் மற்றும் சிபிஎஸ்இ உள்ளிட்ட பல்வேறு போட்டித் தேர்வுகளில் ஏற்பட்டுள்ள தொடர் குளறுபடிகளுக்குப் பொறுப்பேற்று, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் எனப் போராட்டக் குரல் எழுந்துள்ளது. இதற்காகக் காக்கரோச் ஜனதா கட்சியின் நிறுவனரான அபிஜீத் தீப்கே, அமெரிக்காவிலிருந்து வரும் ஜூன் 6 ஆம் தேதி சனிக்கிழமை காலை டெல்லிக்குத் திரும்ப உள்ளதாகத் தனது இன்ஸ்டாகிராம் வீடியோவில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இந்திய அரசியலமைப்பின்படி, மாணவர்களின் எதிர்காலத்தை வீணடித்த இந்தத் தேர்வுக் குளறுபடிகளுக்கு அரசு முறையான பொறுப்பேற்க வேண்டும் என்றும், இதற்காக மாணவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அனைவரும் டெல்லியில் தன்னுோடு இணைந்து அமைதி வழியில் குரல் எழுப்ப வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
டெல்லி ஜந்தர் மந்தர் போராட்டம்
டெல்லி விமான நிலையம் மற்றும் ஜந்தர் மந்தர் பகுதியில் அனுமதி கோரிப் பேரணி
ஜூன் 6 ஆம் தேதி காலை டெல்லி விமான நிலையம் வரும் தன்னை, ஆதரவாளர்கள் அனைவரும் அங்கு வந்து சந்திக்குமாறு அபிஜீத் தீப்கே தனது வீடியோ பதிவின் மூலம் கேட்டுக் கொண்டுள்ளார். விமான நிலையத்திலிருந்து தனது ஆதரவாளர்களுடன் நேரடியாகப் பார்லிமென்ட் ஸ்ட்ரீட் காவல் நிலையத்திற்குச் செல்ல உள்ளதாகவும் அவர் அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார். டெல்லியின் புகழ்பெற்ற ஜந்தர் மந்தர் பகுதியில் தங்களின் அமைதியான போராட்டத்தை நடத்துவதற்கான முறையான அனுமதியைக் காவல்துறையிடம் கோரிப் பெற்று, அதன் பின்னரே அங்குப் போராட்டத்தைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
காக்ரோச் ஜனதா கட்சி பின்னணி
இளைஞர்களின் சமூக ஊடக இயக்கமாக உருவெடுத்த காக்ரோச் ஜனதா கட்சியின் பின்னணி
அபிஜீத் தீப்கே என்பவரால் தொடங்கப்பட்ட இந்த 'காக்ரோச் ஜனதா கட்சி' என்பது முழுக்க முழுக்க இளைஞர்களை மையமாகக் கொண்டு உருவான ஒரு சமூக ஊடக இயக்கமாகும். ஆரம்பிக்கப்பட்ட சில நாட்களிலேயே சமூக வலைத்தளங்களில் இளைஞர்களின் ஆதரவோடு மிக வேகமாகப் பரவிய இந்த இயக்கத்தைப் பல்வேறு பொதுப் பிரமுகர்களும் பின்தொடர்ந்து ஆதரவளித்து வருகின்றனர். தொடக்கத்தில் ஒரு நையாண்டிப் பக்கமாகத் தொடங்கப்பட்டாலும், தற்பொழுது தேர்வுக் குளறுபடிகளால் கவலையடைந்துள்ள ஒரு கோடிக்கும் அதிகமான மாணவர்களின் உரிமைகளுக்காகப் போராடும் களமாக இது மாறியுள்ளதாக அபிஜீத் தீப்கே தெரிவித்துள்ளார்.