காக்ரோச் ஜனதா கட்சி இளைஞர் பேரணி: மத்திய அரசுக்கு எதிராக செப்டம்பர் 5-இல் மீண்டும் போராட்டம்
செய்தி முன்னோட்டம்
டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற தொடர் போராட்டங்களுக்கு பிறகு அமைதியான மாணவர் இயக்கம், மத்திய அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டதாக கூறி காக்ரோச் ஜனதா கட்சி(CJP) மீண்டும் களமிறங்கவுள்ளது. இதனையொட்டி, வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி டெல்லி இந்தியா கேட்டிலிருந்து காவல்துறை தலைமை அலுவலகம் வரை பிரம்மாண்ட அமைதி பேரணி நடத்தப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலை 25-ஆம் தேதி மத்திய அரசுடன் எட்டப்பட்ட உடன்பாட்டைத் தொடர்ந்து இளைஞர்களின் போராட்டம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டது. இருப்பினும், மாணவர் அமைப்பினர் மீது பதியப்பட்ட வழக்குளை திரும்பப் பெறுவது உள்ளிட்ட முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் அரசு காலதாமதம் செய்து வருவதாகவும், நீதிமன்ற நடவடிக்கைகளில் தெளிவான உறுதியை வழங்க மறுப்பதாகவும் CJP குற்றஞ்சாட்டியுள்ளது.
நோக்கம்
செப்டம்பர் 5 பேரணியின் நோக்கம் மற்றும் பங்கேற்பாளர்கள்
இந்த பேரணியானது Gen Z இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு இழைக்கப்பட்ட துரோகத்திற்கு எதிரான குரலாக அமையும் என சிஜேபி செய்தி தொடர்பாளர் சௌரவ் தாஸ் தெரிவித்தார்.
மேலும், ஜூலை 20 அன்று காவல்துறை அத்துமீறலால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் தற்கொலைக்கு தள்ளப்பட்ட நீட் மாணவர்களின் குடும்பங்கள் இந்த அமைதி பேரணியை முன்னின்று நடத்துவார்கள் என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
அரசாங்கம் அளித்த உறுதிகளை உடனடியாகச் செயல்படுத்த வலியுறுத்தி நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்களும் மாணவர் அமைப்புகளும் இதில் பெருந்திரளாக பங்கேற்கவுள்ளனர்.
அமைதியான வழியில் தங்களது உரிமைகளை மீட்டெடுக்கும் வரை இந்த நகர்வு தொடரும் என்பதை காக்ரோச் ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுதியளித்துள்ளது.