தவறு செய்தால் அமைச்சர் பதவி காலி, 'ரீல்ஸ்' எடுக்க தடை:அமைச்சரவைக் கூட்டத்தில் முதல்வர் விஜய் எச்சரிக்கை
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்து இரண்டு மாதங்கள் கடந்துள்ள நிலையில், முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில் முக்கிய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், அமைச்சர்களின் செயல்பாடுகள் மற்றும் எதிர்க்கட்சிகளின் புகார்கள் குறித்து விவாதிக்கப்பட்டபோது, தவறு செய்யும் அமைச்சர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் விஜய் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
எச்சரிக்கை
"தெரிந்தவர், தெரியாதவர் பார்க்க மாட்டேன்": பதவி பறிப்பு எச்சரிக்கை
அமைச்சரவைக் கூட்டத்தில் பேசிய விஜய், த.வெ.க அரசு ஊழலற்ற மற்றும் வெளிப்படைத்தன்மை கொண்ட அரசாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாகத் தெரிவித்தார்.
"ஆட்சிக்குக் கெட்ட பெயர் கொண்டு வரும் வகையில் யார் செயல்பட்டாலும் சகித்துக் கொள்ள முடியாது. தவறு செய்பவர்கள் எனக்குத் தெரிந்தவர்களாக இருந்தாலும் சரி, தெரியாதவர்களாக இருந்தாலும் சரி, எந்தவித சலுகையும் காட்டப்பட மாட்டாது. தவறு நிரூபிக்கப்பட்டால் உடனடியாக அமைச்சர் பதவி பறிக்கப்படும். இதை யாரும் தவறாக எடுத்துக் கொள்ளக் கூடாது" என எச்சரித்துள்ளார்.
சமீபத்தில் பழனி கோவில் நிலம் முறைகேடாக பதிவு செய்யப்பட்ட விவகாரத்தில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் மீது எதிர்க்கட்சிகள் ஊழல் புகார்களை அடுக்கி வரும் பின்னணியில், முதலமைச்சரின் இந்த எச்சரிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரீல்ஸ்
பள்ளி ஆய்வுகளில் 'ரீல்ஸ்' எடுக்க தடை
அரசுப் பள்ளிகளுக்கு ஆய்வுக்கு செல்லும் சில அமைச்சர்கள், அங்கு வீடியோ மற்றும் ரீல்ஸ் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதும், அது மாணவர்களின் கல்விக்கு இடையூறாக அமைவதும் பொதுவெளியில் பெற்றோர்களிடையே கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியிருந்தது.
குறிப்பாக, அண்மையில் பள்ளி ஒன்றிற்கு ஆய்வுக்கு சென்ற அமைச்சர் கீர்த்தனா, அங்கிருந்த மாணவி ஒருவரிடம் ஆங்கிலத்தில் வினவிய முறையும், மாணவி திணறியபோது அருகில் இருந்த ஆசிரியையிடம் கடிந்து கொண்ட விதமும் சமூக வலைத்தளங்களில் கடுமையான விமர்சனத்திற்குள்ளானது.
இதனைக் சுட்டிக்காட்டிய முதலமைச்சர் விஜய், "அமைச்சர்கள் யாரும் தேவையின்றி பள்ளிகளுக்குச் சென்று ரீல்ஸ் வீடியோக்கள் எடுக்கக் கூடாது; மாணவர்களுக்கோ அல்லது பள்ளி நிர்வாகத்திற்கோ எவ்வித இடையூறும் ஏற்படுத்தக் கூடாது" என்று கறாரான அறிவுறுத்தலை வழங்கியுள்ளார்.