ரூ.220 கோடி மதிப்பிலான தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: விண்ணப்பிப்பது எப்படி?
செய்தி முன்னோட்டம்
தமிழக அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் 'தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்' தொடர்பான முதற்கட்டப் பணிக்காணையை தமிழ்நாடு மருத்துவக் பணிகள் கழகம் (TNMSC) வெளியிட்டுள்ளது. முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு, அரசுப் மருத்துவமனைகளில் பிரசவத்தை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் இத்திட்டத்தை அமல்படுத்துகிறது. ஜூன் 22 முதல் செப்டம்பர் மாதம் வரை அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் 1,28,499 குழந்தைகளுக்குத் தங்க மோதிரங்கள் வழங்கப்படவுள்ளன. இதற்காக சுமார் ₹220 கோடி மதிப்பீட்டில் முன்னணி நகை நிறுவனங்களான ஜாய் ஆலுக்காஸ் மற்றும் கல்யாண் ஜூவல்லர்ஸுக்கு 70:30 என்ற விகிதத்தில் ஒப்பந்த ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. இதன்படி ஜாய் ஆலுக்காஸ் நிறுவனம் 89,949 மோதிரங்களையும், கல்யாண் ஜூவல்லர்ஸ் நிறுவனம் 38,550 மோதிரங்களையும் விநியோகம் செய்யும்.
தகுதி
தகுதி மற்றும் விண்ணப்பிக்கும் முறை
இத்திட்டம் வரும் செப்டம்பர் 15-ஆம் தேதி பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு முறைப்படி தொடங்கி வைக்கப்படவுள்ளது.
இருப்பினும், முதலமைச்சர் விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22 முதல் அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகள் அனைவரும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதிபெறுவார்கள்.
தமிழ்நாட்டை வசிப்பிடமாக கொண்டு, அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிரசவிக்கும் அனைத்துத் தாய்மார்களும் இத்திட்டத்திற்குத் தகுதியானவர்கள் ஆவர்.
குழந்தைப் பேறு வரிசை அல்லது பாலின கட்டுப்பாடு ஏதுமின்றி அனைத்து குழந்தைகளுக்கும் சமமாக தங்க மோதிரங்கள் வழங்கப்படும்.
ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை அல்லது ஆதார் அட்டை மூலம் முகவரி சான்றை சமர்ப்பித்து இத்திட்டத்தின் பயனைப் பெறலாம்.