தமிழகத்தில் விரைவில் அறிமுகமாகிறது 'கேரவன் சுற்றுலா': பட்ஜெட்டை முன்னிட்டு முதலமைச்சர் விஜய் ஆலோசனை
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தில் முதன்முறையாக சொகுசு வாகனங்கள் மூலமாக பயணம் செய்து தங்கும் 'கேரவன் சுற்றுலா கொள்கையை' உருவாக்குவது மற்றும் பல்வேறு புதிய சுற்றுலா திட்டங்களை அறிமுகப்படுத்துவது குறித்து, சுற்றுலாத்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் விஜய் இன்று ஆலோசனை மேற்கொண்டார். அடுத்த மாதம் தவெக அரசு தங்களது நடப்பாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ள நிலையில், அதற்கான நிதி ஒதுக்கீடு மற்றும் புதிய அறிவிப்புகள் குறித்த தொடர் ஆலோசனைக் கூட்டங்கள் முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற்று வருகின்றன. வரும் ஜூலை 22ஆம் தேதி வரை இந்த ஆலோசனைகள் நீடிக்கும் என முதலமைச்சர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அறிவுறுத்தல்
"சுற்றுலாவை வெறும் பொழுதுபோக்காக பார்க்காதீர்"
இன்றைய ஆலோசனை கூட்டத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார், துறைச் செயலாளர் மற்றும் முக்கிய அதிகாரிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் விஜய், "சுற்றுலாவை வெறும் பொழுதுபோக்கு அம்சமாகவோ, வருவாய் ஈட்டும் துறையாகவோ மட்டும் கருத வேண்டாம். அது மக்களுக்குப் புத்துணர்ச்சியையும், மன மகிழ்ச்சியையும் தரக் கூடிய ஒரு மிக முக்கியத் துறையாகப் பார்க்கப்பட வேண்டும்" என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
முக்கிய அம்சங்கள்
முதலமைச்சர் விஜய் நடத்திய ஆலோசனையின் முக்கிய அம்சங்கள்
கேரளா, தெலங்கானா ஆகிய அண்டை மாநிலங்களைத் தொடர்ந்து தமிழகத்திலும் கேரவன் சுற்றுலாத் திட்டத்தை முறைப்படி கொண்டு வரத் திட்டமிடப்பட்டுள்ளது.
சுற்றுலா தலங்கள் மூலம் பெறப்படும் ஒட்டுமொத்த வருவாயில் 25 விழுக்காட்டை, அந்தந்தப் பகுதி உள்ளூர் மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக நேரடியாகப் பயன்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
நகர்ப்புற மக்களுக்குக் கிராமப்புற வாழ்வியலையும், பாரம்பரியத்தையும் நேரில் அனுபவிக்கும் வாய்ப்பை வழங்கும் வகையில் புதிய கிராமப்புற சுற்றுலா மையங்களை உருவாக்குதல்; சூழல் சுற்றுலா, பண்பாட்டு சுற்றுலா, கடலோர சுற்றுலா மற்றும் கலாச்சார சுற்றுலா ஆகியவற்றை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த திட்டங்களை உருவாக்குதல் உள்ளிட்டவை பற்றியும் ஆலோசிக்கப்பட்டது.
தமிழகத்தின் தொன்மையான வரலாற்றையும் கலாச்சாரத்தையும் உலகிற்குப் பறைசாற்றும் வகையில் தனித்துவமான தமிழ் பண்பாட்டு சுற்றுலாத் திட்டத்தை வடிவமைத்தல் உள்ளிட்டவையும் பரிசீலனையில் உள்ளது.