பதவியேற்ற பின் முதல்முறை.. பிரதமர் மோடியை நேரில் சந்தித்த தமிழக முதல்வர் விஜய்
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தில் புதிய அரசை அமைத்து முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய், இன்று மாலை டெல்லியில் உள்ள பிரதமரின் அதிகாரபூர்வ இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்துப் பேசினார். மாலை 4:35 மணியளவில் தொடங்கிய இந்த சந்திப்பு சுமார் 25 நிமிடங்கள் நீடித்தது. முதலமைச்சராகப் பதவியேற்ற பிறகு பிரதமர் மோடியை முதல்வர் விஜய் சந்திப்பது இதுவே முதல்முறை என்பதால், இந்த சந்திப்பு அரசியல் மற்றும் அரசு நிர்வாக வட்டாரத்தில் பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. இச்சந்திப்பின் போது தமிழகத்தின் முக்கியப் பிரச்சினைகளான மேகதாது அணை விவகாரம் மற்றும் மாநில நலன் சார்ந்த திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறித்து பிரதமரிடம் முதல்வர் விஜய் நேரில் எடுத்துரைத்ததுடன், இது தொடர்பான கோரிக்கை மனுவையும் அவரிடம் சமர்ப்பித்துள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#WATCH | Tamil Nadu Chief Minister C. Joesph Vijay arrives at Tamil Nadu House, in Delhi, after meeting Prime Minister Narendra Modi. pic.twitter.com/Rbo6NT0TvD
— ANI (@ANI) May 27, 2026
அடுத்தடுத்து சந்திப்பு
அமித் ஷா, நிர்மலா சீதாராமனுடன் அடுத்தடுத்து சந்திப்பு
பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பைத் தொடர்ந்து, முதலமைச்சர் விஜய்யின் டெல்லி பயண அட்டவணை மிகத் தீவிரமாகத் திட்டமிடப்பட்டுள்ளது. மோடியுடன் சந்திப்பை முடித்துக்கொண்ட தமிழ்நாடு இல்லத்திற்கு வந்த விஜய் அடுத்ததாக மாலை 6:45 மணிக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க உள்ளார். அப்போது மாநில சட்டம் ஒழுங்கு, போதைப்பொருள் தடுப்புச் சிறப்புப் படை செயல்பாடுகள் மற்றும் பாதுகாப்பு விவகாரங்கள் குறித்து ஆலோசனை செய்வார் என கூறப்படுகிறது. தொடர்ந்து, இரவு 7:30 மணிக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உடன் சந்திப்பு நிகழவுள்ளது. அந்த சந்திப்பில் அவர் தமிழகத்திற்கான ஜிஎஸ்டி நிலுவைத் தொகை, சென்னை மெட்ரோ ரயில் உள்ளிட்ட திட்டங்களுக்கான மத்திய நிதி ஒதுக்கீடு கோரி மனுவை அளிப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.