'அவர்கள் நாடகம் ஆடினார்கள்..பழி என் மேல் போடப்பட்டது': கரூரில் முதல்வர் விஜய் ஆவேசம்
செய்தி முன்னோட்டம்
தமிழக சட்டமன்றத் தேர்தலின் போது கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த துயரச் சம்பவத்திற்குப் பிறகு, ஒன்பது மாதங்கள் கழித்து முதல்முறையாக இன்று கரூர் மாவட்டத்திற்கு வருகை தந்தார் தமிழக முதல்வர் விஜய். அப்போது பொதுமக்கள் முன்னிலையில் அவர் உரையாற்றுகையில் இச்சம்பவம் குறித்து உருக்கமாகவும் ஆவேசமாகவும் பேசியுள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசுப் பணி நியமன ஆணைகளை வழங்கிய பின் உரையாற்றிய அவர், முந்தைய திமுக அரசு மற்றும் காவல் துறையின் செயல்பாடுகளைக் கடுமையாகச் சாடினார். இதன் பின்னணியில் அரசியல் சதி உள்ளதாகவும் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார்.
நினைவுகூறல்
துயரத்தை நினைவு கூர்ந்த முதல்வர் விஜய்
"கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் எனக்கு அளவிட முடியாத வேதனையை அளித்தது; நமது சகோதரிகளின் குழந்தைகளை நாம் இழந்துவிட்டோம். இந்த இழப்பு என் மனதில் இன்னும் ஒரு நீங்காத சுமையாகவே இருந்து வருகிறது" என்று குறிப்பிட்டார். இச்சம்பவம் குறித்து தன் மீதும் தனது கட்சி மீதும் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை மறுத்த முதல்வர், கூட்டத்தை கட்டுப்படுத்துவது காவல் துறையின் கடமை என்று சுட்டிக்காட்டினார். "நான் கூட்டத்தை முறைப்படுத்தக் காவல் துறையைத்தான் முழுமையாக நம்பியிருந்தேன், ஆனால் இந்த மரணங்களுக்கு என் மீது பழி போடப்பட்டது. மைதானத்தில் நிலைமை மோசமடைவதை முன்கூட்டியே தவெக குழுவினருக்குத் தெரிவித்து எச்சரித்திருந்தால் இந்தத் துயரத்தைத் தடுத்திருக்கலாம்; ஆனால், அவர்கள் நாடகமாடி பழியை எங்கள் மீது திருப்பினார்கள்" என்று குற்றம் சாட்டினார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
Chief Minister C. Joseph Vijay said, "The Perambalur Police alerted us that the crowd was getting too large. But the Karur Police didn't give us any such alert. They themselves brought us to the venue, and I believed them. #TNCMCaresForKarur pic.twitter.com/uPKNJ3qKq3
— Actor Vijay Team (@ActorVijayTeam) July 10, 2026
அரசியல்
"இதன் பின்னணியில் இருப்பது யார்?"
இந்தச் சம்பவத்திற்குப் பின்னால் வெளிப்புற அரசியல் அழுத்தம் இருந்திருக்கலாம் என்று சந்தேகம் எழுப்பிய விஜய், "அன்று அதிகாரிகள் நடந்து கொண்ட விதம் எனக்குப் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இதற்கு யார் பொறுப்பு? அன்று பின்னணியில் இருந்து அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தது யார்?" என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார். மேலும், நெரிசலுக்கு பின் தான் மைதானத்தை விட்டு ஓடிவிட்டதாக கூறிய எதிர்க்கட்சிகளுக்கு பதிலடி கொடுத்த அவர், தான் மக்களை விட்டு என்றுமே ஓடமாட்டேன் என்றும், பாதிக்கப்பட்டவர்களுக்காக கரூரில் தவெக சார்பில் நினைவிடம் கட்டப்படும் என்றும் அறிவித்தார்.
சாடல்
மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக மீது தாக்குதல்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இந்த விவகாரத்தில் அரசியல் செய்வதாக குற்றம் சாட்டிய முதல்வர் விஜய், "ஸ்டாலின் சார் இந்த வழக்கைப் பயன்படுத்தி எங்கள் மீது பழி போடுகிறார். கட்சி நிதி என்ற பெயரில் சில கட்சிகள் கோடிக்கணக்கில் மக்கள் பணத்தைச் சூறையாடியுள்ளன". "அண்மையில் சட்டமன்றத்தில் நான் கட்சி நிதி ஊழல் குறித்துப் பேசியதும் திமுகவினர் அவையை விட்டு வெளியேறினர். எங்களைக் கண்டு அவர்கள் பயப்படுகிறார்கள்" என்று கடுமையாக விமர்சித்தார். தற்போது இந்த வழக்கு சிபிஐ வசம் இருக்கும் சூழலில், முதல்வரின் இந்த அதிரடிப் பேச்சு தமிழக அரசியலில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.