LOADING...
முதல்வர் விஜய் தலைமையில் புதிய அரசின் முதல் அமைச்சரவைக் கூட்டம் இன்று; என்ன எதிர்பார்க்கலாம்?
விஜய் தலைமையில் முதல் அமைச்சரவைக் கூட்டம் இன்று

முதல்வர் விஜய் தலைமையில் புதிய அரசின் முதல் அமைச்சரவைக் கூட்டம் இன்று; என்ன எதிர்பார்க்கலாம்?

எழுதியவர் Venkatalakshmi V
Jun 05, 2026
10:27 am

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தில் தவெக தலைமையிலான புதிய கூட்டணி அரசு கடந்த மே 10-ஆம் தேதி பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, இன்று காலை 10 மணியளவில் சென்னை தலைமைச் செயலகத்தில் மிக முக்கியமான முதலாவது அமைச்சரவைக் கூட்டம் கூடுகிறது. தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் பங்கேற்க த.வெ.க மற்றும் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த அனைத்து அமைச்சர்களுக்கும் அதிகாரப்பூர்வமாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. புதிய அரசு பதவியேற்ற பிறகு நடைபெறும் முதல் அதிகாரப்பூர்வக் கூட்டம் இது என்பதால், தேர்தல் வாக்குறுதிகள், நிதி நெருக்கடி, புதிய பட்ஜெட் மற்றும் கொள்கை முடிவுகள் எனப் பல முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ள கோட்டையை நோக்கி ஒட்டுமொத்த தமிழகத்தின் பார்வையும் திரும்பியுள்ளது.

விவாதம்

அமைச்சரவை கூட்டத்தின் முக்கிய விவாத தலைப்புகள்

மகளிர் உரிமைத் தொகை உயர்வு: தேர்தல் களத்தில் தவெக கொடுத்த மிக முக்கியமான மற்றும் பெண்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் வாக்குறுதி, மகளிருக்கு மாதம் 2,500 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என்பதாகும். நிதிச் சவால்: தற்போது வழங்கப்படும் 1,000 ரூபாயை 2,500 ரூபாயாக உயர்த்தினால், தற்போதுள்ள 1.3 கோடி தகுதியான பெண்களுக்கு இந்தத் தொகையை வழங்க ஆண்டுக்குக் கூடுதலாக சுமார் ₹39,000 கோடி தேவைப்படும். தமிழகத்தின் ஒட்டுமொத்த கடன் சுமை 10 லட்சம் கோடியைத் தாண்டியுள்ள நிலையில், இந்த கூடுதல் நிதியைத் திரட்டுவது எப்படி என்பது குறித்து நிதி அமைச்சர் மேரி வில்சன் தலைமையிலான குழு தயாரித்துள்ள விரிவான திட்டம் குறித்து இன்று தீவிர ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

டாஸ்மாக்

2. 717 டாஸ்மாக் கடைகள் மூடல் & ₹8,000 கோடி வருவாய் இழப்பு

முதலமைச்சர் விஜய் பதவியேற்ற உடனே மக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் பள்ளிகளுக்கு அருகில் இருந்த 717 டாஸ்மாக் கடைகளை மூட அதிரடி உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்த கடைகள் முழுமையாக மூடப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்வதுடன், இதனால் அரசுக்கு ஏற்படும் சுமார் 8,000 கோடி ரூபாய் வருவாய் இழப்பை எவ்வாறு ஈடு செய்வது என்பது குறித்து விவாதிக்கப்படும். மது விற்பனை மூலம் கிடைக்கும் வருவாய் முழுவதும் அரசு கஜானாவிற்கு மட்டுமே செல்வதை உறுதி செய்யும் வகையில், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை மூலம் புதிய டிஜிட்டல் கண்காணிப்பு முறைகள் மற்றும் காலி பாட்டில்களை திரும்ப பெறும் திட்ட சீர்திருத்தங்கள் குறித்து ஒப்புதல் அளிக்கப்பட வாய்ப்புள்ளது.

Advertisement

பயிர்க்கடன்

200 யூனிட் இலவச மின்சாரம் & பயிர்க்கடன் தள்ளுபடி

தமிழக மக்கள் ஆவலோடு எதிர்பார்க்கும் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தை எப்போது, எப்படி அமல்படுத்துவது என்பதற்கான அரசாணை குறித்து விவாதிக்கப்படும். 5 ஏக்கர் வரையிலான விவசாயக் கடன்கள் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கப்பட்ட போதிலும், ஆர்பிஐ (RBI) விதிகளைக் காரணம் காட்டி 50,000 ரூபாய் வரை கடன் பெற்றவர்களுக்கு மட்டுமே தள்ளுபடி என அரசு அறிவித்தது விவசாயிகள் மத்தியிலும், த.வெ.க-வின் கூட்டணி கட்சிகள் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு தீர்வாக, விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 15,000 ரூபாய் வழங்கும் திட்டத்தை மத்திய அரசின் பிஎம்-கிசான் (PM-Kisan) திட்டத்துடன் இணைத்து, மாநில அரசு தனது பங்காக 9,000 ரூபாயை டாப்-அப் செய்து விவசாயிகளை திருப்திப்படுத்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட வாய்ப்புள்ளது.

Advertisement

வெள்ளை அறிக்கை

முக்கியக் கொள்கை முடிவுகள்

இவை தவிர, கல்வி மற்றும் மாநில உட்கட்டமைப்பு தொடர்பான சில முக்கிய விவகாரங்களில் த.வெ.க அரசின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு என்ன என்பதை இறுதி செய்யவும் இன்றைய அமைச்சரவை கூட்டம் வழிவகுக்கும். மும்மொழிக் கொள்கை மீதான மாநில அரசின் நிலைப்பாடு, மேகதாது அணை விவகாரத்தில் அண்டை மாநிலத்துடனான அணுகுமுறை, பரந்தூர் புதிய விமான நிலையத் திட்டம்குறித்த அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து முடிவெடுக்கப்படலாம். வரவிருக்கும் புதிய அரசின் முதல் சட்டமன்றக் கூட்டத்தொடர் மற்றும் ஆளுநர் உரைக்கான தேதிகளை இறுதி செய்தலும் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக அரசின் தற்போதைய உண்மையான நிதி நிலையை விளக்கும் 'வெள்ளை அறிக்கை' அடுத்த சில நாட்களில் வெளியாகவுள்ளது. இந்த வெள்ளை அறிக்கை குறித்து இன்றைய கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும்.

Advertisement