தென்காசி மாவட்டத்தில் பெண்களால் நடத்தப்பட்ட 'வாவ் வொண்டர் ஆஃப் வுமன்' கிறிஸ்துமஸ் மார்க்கெட்
கிறித்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, தென்காசி மாவட்டம் கடையநல்லூரில், பெண்களுக்காக பெண்களே ஏற்பாடு செய்த கிறித்துமஸ் மார்க்கெட்டில் சுய தொழில் செய்யும் பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். 'வாவ் வொண்டர் ஆஃப் வுமன்' என்னும் அமைப்பின் சார்பில் நடத்தப்படும் இந்த மார்க்கெட் கடையநல்லூரில் உள்ள இட்டாலியன் ரெஸ்டாரண்டில் வைத்து நடத்தப்பட்டு வருகிறது. இதில் சுயமாக தொழில் செய்யும் பெண்களான கேக் தயாரிப்பவர்கள், இயற்கை மூலிகைகளை கொண்டு சூப் பவுடர் செய்பவர்கள், ஆரி ஒர்க் செய்யும் பெண்கள், இயற்கை முறையில் சோப் தயாரிப்பவர்கள், அழகிய பேனா நோட்டுக்கள் ஆகியவற்றை சமூக வலைத்தளம் மூலம் விற்பவர்கள், குழந்தைகளை கவரும் வண்ணம் விளையாட்டு பொருட்களை சுயமாக தயாரித்து விற்பனை செய்வோர் என பலர் கலந்துக்கொண்டனர்.
சுயத்தொழில் செய்யும் பெண்களுக்கு தன்னம்பிக்கை அளிக்க நடத்தப்படும் மார்க்கெட்
இதில் கலந்துகொண்டு வியாபாரம் செய்த பெண்கள் இது குறித்து பேசுகையில், "பெண்களால் எல்லாம் செய்ய முடியும் என்ற நோக்கில், பெண்களாகிய நாங்கள் அனைவரும் ஒருங்கிணைந்து கடைகளை நடத்துவது எங்களது தன்னம்பிக்கையை அதிகரித்துள்ளது. இதன் மூலம். வீட்டிற்குள்ளேயே தொழில் செய்யும் எங்களை போன்ற பெண்கள், ஆண்களை போல் பெரியளவில் வியாபாரம் செய்ய உதவியாக அமைகிறது" என்று தெரிவித்துள்ளனர். மேலும் இது குறித்து, 'வாவ்' அமைப்பினர் சார்பில் கூறுகையில், "வீட்டிலேயே தொழில் செய்து வரும் பெண்களை ஊக்குவிக்கவும், அவர்களது திறமைகளை வெளியில் கொண்டு வரும் நோக்கத்துடன் தான் இந்த மார்க்கெட் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது" என்று கூறப்பட்டது. இந்த கிறித்துமஸ் மார்க்கெட் டிசமபர் 24 மற்றும் 25 தேதிகளில் மட்டுமே நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.