தலைமை செயலாளர் தலைமையில் ஜி20 மாநாடு முன்னேற்பாடுகள் குறித்த ஒருங்கிணைப்பு கூட்டம்
தமிழ்நாடு மாநிலத்தில் நடக்கவுள்ள ஜி20 மாநாடு முன்னேற்பாடுகள் குறித்து பல துறைகளின் ஒருங்கிணைப்பு கூட்டம் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தலைமையில் இன்று(ஜூலை.,5)தலைமைச்செயலகத்தில் நடைபெற்றது. இந்த ஜி20 கூட்டமானது சர்வதேசப்பொருளாதார ஒத்துழைப்புக்கான முதன்மை மன்றமாக பார்க்கப்படுகிறது. சர்வதேச பொருளாதார முக்கிய பிரச்சனைகள், நிர்வாகம் வடிவமைப்பு மற்றும் உலகளாவிய கட்டமைப்பு ஆகியவற்றுள் ஜி20 மாநாடு முக்கியப்பங்கு வகிக்கிறது. இந்நிலையில், இம்முறை இந்தியாவின் தலைமையில் 2022ம்ஆண்டு டிசம்பர் 1 முதல் 2023ம்ஆண்டு நவம்பர் 30வரை நடைபெறவுள்ளது. இதில் பேரிடர் அபாயத்தினை குறைக்க புதிய பணிக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் மூலம் ஒருங்கிணைக்கப்பட்டக்குழுவின் 3 கூட்டங்கள் ஆண்டு முழுவதும் நடத்த திட்டமிடப்பட்டநிலையில் அதில் 2 கூட்டங்கள் காந்திநகர் மற்றும் மும்பையில் நடந்து முடிந்துள்ளது.
பல்வேறு துறை சார்ந்தோர் பங்கேற்பு
இதனைத்தொடர்ந்து, தற்போது இதன் 3வது கூட்டம் சென்னையில் வரும் 24ம்தேதி முதல் 26ம்தேதி வரை நடக்கவுள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் குறித்து இதில் பேசிய தலைமை செயலாளர், "தமிழகத்தில் பேரிடர் அபாயக்குறைப்பு குறித்து உறுப்பு நாடுகளின் கூட்டத்தினை சிறப்பான முறையில் நடத்தப்படவேண்டும். அதற்கான அனைத்து முன்னேற்பாட்டு பணிகள் அனைத்தையும் அதன் தொடர்புள்ள துறைகள் மேக்கொள்ளவேண்டும்" என்று தெரிவித்துள்ளார். இக்கூட்டத்தில் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய உறுப்பினரான செயலர் கமல் கிஷோர், ஜி20 மாநாட்டின் இயக்குனர் மிர்னாலினி, வருவாய் நிர்வாக ஆணையர், அறநிலையங்கள் துறை முதன்மை செயலாளர் மணிவாசன், மக்கள் தொடர்பு துறை இயக்குனர் மோகன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் என பல துறை சார்ந்த முக்கிய நபர்கள் கலந்துக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.