Loading...
ஏசி பிரிவில் தீப்பிடித்துப் புகை! 9 பிறந்த குழந்தைகள் நல்வாய்ப்பாக மீட்பு; சத்ரபதி சம்பாஜிநகர் மருத்துவமனையில் பதற்றம்
மகாராஷ்டிரா மருத்துவமனை என்ஐசியூ தீ விபத்து

ஏசி பிரிவில் தீப்பிடித்துப் புகை! 9 பிறந்த குழந்தைகள் நல்வாய்ப்பாக மீட்பு; சத்ரபதி சம்பாஜிநகர் மருத்துவமனையில் பதற்றம்

எழுதியவர் Sekar Chinnappan
Sep 04, 2026
03:51 pm

செய்தி முன்னோட்டம்

மகாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சம்பாஜிநகரில் உள்ள ஜால்னா சாலையில் இயங்கி வரும் ஆசியன் மருத்துவமனை என்ற தனியார் மருத்துவமனையின் பிறந்த குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவில் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 4) அதிகாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அங்கு பொருத்தப்பட்டிருந்த ஏசி இயந்திரத்திலிருந்து அடர்ந்த புகை வெளிவந்ததை மருத்துவமனை ஊழியர்கள் கவனித்து உடனடியாக எச்சரிக்கை விடுத்தனர். கூடுதல் விபரங்கள் இங்கே:-

மீட்பு

9 பிஞ்சுக் குழந்தைகள் பத்திரமாக மீட்பு

தீ விபத்து ஏற்பட்ட சமயத்தில் அந்த தீவிர சிகிச்சைப் பிரிவில் 9 பிறந்த குழந்தைகள் தீவிர மருத்துவக் கண்காணிப்பில் இருந்தனர்.

புகை பரவுவதைக் கண்ட மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் மருத்துவர்கள் உடனடியாக செயல்பட்டு, 9 குழந்தைகளையும் அருகில் இருந்த பொதுப் பிரிவு நோயாளிகளையும் பாதுகாப்பாக வெளியேற்றினர்.

இதன் காரணமாக அசம்பாவிதம் எதுவும் நிகழாமல் அனைத்துக் குழந்தைகளும் நல்வாய்ப்பாகப் உயிர் தப்பினர்.

மருத்துவமனை மாற்றம்

மாற்று மருத்துவமனைக்கு மாற்றம் மற்றும் தொடர் சேவை

மீட்கப்பட்ட 9 குழந்தைகளும் அவர்களின் பெற்றோரின் முழு சம்மதத்துடன் உடனடியாக நகரில் உள்ள பிற மருத்துவமனைகளின் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டனர்.

மருத்துவமனை நிர்வாகி மருத்துவர் சோயப் ஹாஷ்மி கூறுகையில், நிலைமை உடனடியாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுச் சுத்தம் செய்யப்பட்டது என்றும், தற்போது மருத்துவமனை வழக்கம் போல் இயங்கி வருகிறது என்றும் தெரிவித்தார்.

இச்சம்பவத்தில் யாருக்கும் காயங்களோ அல்லது உயிரிழப்போ ஏற்படவில்லை என ஜவஹர்நகர் காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

ADVERTISEMENT

அமராவதி

அமராவதி சம்பவத்தின் தொடர்ச்சி

சுமார் 10 நாட்களுக்கு முன்பாக மகாராஷ்டிராவின் அமராவதி மாவட்டப் பெண்கள் மருத்துவமனை என்ஐசியூ பிரிவில் ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்தில் 3 குழந்தைகள் உயிரிழந்த நிலையில், 36 குழந்தைகள் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அந்த சம்பவம் தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், தற்போது சத்ரபதி சம்பாஜிநகரிலும் அதே போன்ற ஒரு தீ விபத்து ஏற்பட்டுள்ளது மருத்துவமனை பாதுகாப்பு குறித்த கவலைகளை மீண்டும் அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT