ரூ.3,108 கோடியில் சென்னை 'ரிங் மெயின்' குடிநீர் திட்டம்: முதலமைச்சர் விஜய் அடிக்கல் நாட்டினார்
செய்தி முன்னோட்டம்
அதிவேகமாக விரிவடைந்து வரும் சென்னை பெருநகரப் பகுதிகளுக்குத் தடையின்றி சீரான குடிநீர் விநியோகம் செய்யும் வகையில், நகரின் முக்கிய ஒன்பது நீராதாரங்களையும் ஒரே கட்டமைப்புக்குள் ஒருங்கிணைக்கும் ரிங் மெயின் சிஸ்டம் என்ற புதிய பிரம்மாண்ட திட்டத்திற்கு முதலமைச்சர் விஜய் சோழிங்கநல்லூரில் இன்று அடிக்கல் நாட்டினார். சுமார் ரூ.3,108 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்பட்டுள்ள இத்திட்டம், சென்னை மட்டுமின்றி ஆவடி மற்றும் தாம்பரம் மாநகராட்சிகளுக்கு உட்பட்ட புறநகர்ப் பகுதிகளின் எதிர்காலக் குடிநீர்த் தேவைகளுக்கும் நிரந்தர தீர்வாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நீர் விநியோகம்
நீர் விநியோகமும் ஒருங்கிணைப்பின் தேவையும்
சென்னை குடிநீருக்காக பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகள், ஐந்து சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் மூன்று கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையங்கள் தனித்தனியாக இயங்குகின்றன. பேரூரில் 400 எம்.எல்.டி நிலையப் பணிகளும் நடக்கின்றன.
இவை தனித்தனி குழாய்களால் செயல்படுவதால், ஒரு பகுதியில் பழுது ஏற்பட்டால் மற்றொன்றிலிருந்து நீர் கொண்டு செல்ல முடிவதில்லை.
இதற்குத் தீர்வாக, நீரேற்று நிலையங்கள் மற்றும் குழாய்கள் மூலம் ஒன்பது நீராதாரங்களை வட்ட வடிவில் இணைத்து தடையற்ற விநியோகத்தை உறுதி செய்வதே ரிங் மெயின் அமைப்பின் நோக்கமாகும்.
ரூ.3,108 கோடி பட்ஜெட்
நவீன ஸ்காடா தொழில்நுட்பம்
ஆசிய வளர்ச்சி வங்கியின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தின் கீழ், சென்னை எல்லைப் பகுதிகளை ஒட்டி சுமார் 98 கிலோமீட்டர் நீளத்திற்கு பூமிக்கு அடியில் பிரம்மாண்ட குழாய்கள் பதிக்கப்படவுள்ளன.
அழுத்த மற்றும் நீர்த் தர உணரி சென்சார்கள், நவீன பி.எல்.சி மற்றும் ஸ்காடா (SCADA) கட்டுப்பாட்டு மையத்தின் மூலம் தலைமை அலுவலகத்தில் இருந்தே நீர் விநியோகம் தொடர்ந்து கண்காணிக்கப்படும்.
சோழிங்கநல்லூர், பள்ளிக்கரணை, வேளச்சேரி, போரூர், அம்பத்தூர், புழல், மாதவரம், திருவொற்றியூர், அடையாறு, திருவான்மியூர் உள்ளிட்ட பெருநகரப் பகுதிகள் அனைத்தும் இந்த வளையக் கட்டமைப்பில் இணைக்கப்பட்டு, 2057-ஆம் ஆண்டின் 1,762 எம்.எல்.டி தேவையைக் கையாளும் வகையில் பணிகள் அடுத்த 2 முதல் 4 ஆண்டுகளில் முழுமை பெறவுள்ளன.