சென்னையில் 15 நாட்களாக அதிகரிக்கும் 'மெட்ராஸ் ஐ' தொற்று
சென்னையில் "மெட்ராஸ் ஐ" என்று அழைக்கப்படும் விழி வெண்படல அழற்சி அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த தொற்றுக்கு சுயமாக சிகிச்சை எடுத்துக் கொள்ளக் கூடாது எனவும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இது குறித்து கண் மருத்துவ நிபுணர்கள் கூறியதன்படி,"காலநிலை மாற்றங்களால் கண் வலியுடன் கூடிய நோய்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, கடந்த ஒரு மாதத்தில், கண் மருத்துவமனைகளில் நோயாளிகள் 15 சதவீதம் அதிகரித்துள்ளது"
மெட்ராஸ் ஐ- யை தவிர்க்க தனிமனித பாதுகாப்பு அவசியம்
"மெட்ராஸ் ஐ" நோய் தொற்று ஏற்பட்ட பிறகு சரியான முறையில் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். மெட்ராஸ் ஐ பாதிக்கப்பட்டவர்களின் கண்களைப் பார்த்தால் பரவுவது என்பது தவறான நம்பிக்கை. மெட்ராஸ் ஐ உள்ளவர்கள் பயன்படுத்திய பொருட்களை மற்றவர்கள் பயன்படுத்துவதால், இந்த தொற்று பரவும். எனவே தனிசுய பாதுகாப்பு மிகவும் முக்கியம்.
சுய சிகிச்சையைத் தவிர்க்கவும்; செல்போனை பார்ப்பதை தவிர்க்கவும்
மருத்துவர்களின் அறிவுறுத்தல்படி, "கண்கள் சிவந்து, ஒவ்வாமை ஏற்படும் போது, அதை மெட்ராஸ் ஐ என்று தவறாக நினைத்து கொண்டு சுய சிகிச்சை மேற்கொள்வதால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும். மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளையே பயன்படுத்த வேண்டும்". பொதுவாக, மெட்ராஸ் ஐ குணமடைய 2 முதல் 4 வாரங்கள் ஆகும். எனினும், அதற்கு தொடர்ச்சியான சிகிச்சை அவசியம். மெட்ராஸ் ஐ ஏற்பட்ட பின்னர், செல்போனை பார்ப்பதை தவிர்க்கவும், ஏனென்றால் அது தொற்றை அதிகரிக்க வழிவகுக்கும். கண் தொற்றுள்ள நோயாளிகள், கண்ணிலிருந்து வரும் திரவத்தை துடைக்க டிஸ்யூ பேப்பரை (tissue paper) பயன்படுத்த வேண்டும்.
மெட்ராஸ் ஐ நோயின் அறிகுறிகள்:
மெட்ராஸ் ஐ பாதிப்பு ஒருவருக்கு ஏற்பட்டதும் பல்வேறு அறிகுறிகள் தென்படும். குறிப்பாக: கண்கள் சிவந்து போதல் கண்கள் மற்றும் இமைகளில் வீக்கம் கண்களில் நீர் வடிதல் கண்களில் எரிச்சல் மற்றும் நமைச்சல் இதன் மூலம், பாக்டீரியா தொற்றின் காரணமாக கண்ணில் சீழ் வர வாய்ப்பு உள்ளது. மேலும், நோய்த்தொற்று கண் கருவிழியில் பரவினால் பார்வை இழக்கவும் அபாயம் உள்ளது. மெட்ராஸ் ஐ யை ஏற்படுத்தும் வைரஸால் ஜலதோஷமும் ஏற்படலாம். சிலருக்கு காய்ச்சலும், அதனைத் தொடர்ந்து கண் வலியும் ஏற்படலாம்.