Loading...
'அக்டோபர் 3-ல் நல்ல செய்தி வரும்': அமைச்சர்கள் வாக்குறுதியை அடுத்து தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் ஒத்திவைப்பு
தூய்மைப் பணியாளர்கள் அமைச்சர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தை

'அக்டோபர் 3-ல் நல்ல செய்தி வரும்': அமைச்சர்கள் வாக்குறுதியை அடுத்து தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் ஒத்திவைப்பு

எழுதியவர் Venkatalakshmi V
Sep 04, 2026
05:20 pm

செய்தி முன்னோட்டம்

சென்னை ரிப்பன் மாளிகை வளாகத்தில் பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 16 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தூய்மைப் பணியாளர்கள் தங்கள் போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்துவதாக கூறியுள்ளனர். தமிழக அரசு அமைச்சர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின் தங்களது போராட்டத்தை வரும் அக்டோபர் 3 ஆம் தேதி வரை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.

கவன ஈர்ப்புத் தீர்மானம்

சட்டப்பேரவையில் எழுந்த கவன ஈர்ப்புத் தீர்மானம்

முன்னதாக, தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் குறித்துச் சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தார்.

"முன்பு எதிர்க்கட்சியாக இருந்தபோது தூய்மைப் பணியாளர்களைத் தனது கட்சி அலுவலகத்திற்கு அழைத்துப் பேசிய தற்போதைய முதலமைச்சர் விஜய், தற்போது அவர்களின் கோரிக்கைகளை கேட்க நேர ஒதுக்கீடு செய்ய மறுப்பது ஏன்?" எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட உழைப்பவர் உரிமை இயக்கப் பிரதிநிதிகளுடன் அமைச்சர்கள் என். ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன் மற்றும் சிடிஆர் நிர்மல்குமார் ஆகியோர் நேரில் சந்தித்து சுமார் இரண்டு மணி நேரம் விரிவான பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில் தூய்மை பணியாளர்களின் நீண்டகாலக் கோரிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டுச் சுமுகமான உடன்பாடு எட்டப்பட்டது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

ADVERTISEMENT

கோரிக்கைகள்

உறுதியளிக்கப்பட்ட முக்கிய கோரிக்கைகள்

பேச்சுவார்த்தைக்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்த உழைப்பவர் உரிமை இயக்கத்தின் தலைவர் கு. பாரதி, "அக்டோபர் 3 ஆம் தேதிக்குள் நல்ல முடிவு எட்டப்படும் என அமைச்சர்கள் உறுதியளித்துள்ளனர். மழைக்காலம் தொடங்குவதற்குள் அனைத்துப் பணியாளர்களுக்கும் மழைக்கால உடைகள், அனைத்து வார்டுகளிலும் கழிப்பிட வசதிகள், அடுத்த மாதம் முதல் உணவுப்படி வழங்க அமைச்சர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்".

"மேலும், போராட்டத்தில் ஈடுபட்ட பணியாளர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெறவும் அரசு சம்மதித்துள்ளது" எனக் கூறினார்.

அரசு தரப்பில் அளிக்கப்பட்ட இந்த நேர்மறையான வாக்குறுதிகளைத் தொடர்ந்து, தூய்மைப் பணியாளர்கள் தங்களின் தர்ணா போராட்டத்தைத் தற்காலிகமாக வாபஸ் பெற்றுப் பணிக்குத் திரும்பியுள்ளனர்.

ADVERTISEMENT