சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் மருத்துவரை கத்திரிக்கோலால் குத்திய நோயாளி
சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை பல்வேறு நோய்களுக்கு சிகிச்சையளிக்கும் பல்நோக்கு மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் பாலாஜி என்பவர் கல்லீரல் நோய் பாதிப்பால் இங்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில்,இங்கு பயிற்சி மருத்துவராக பணிபுரியும் சூர்யா என்பவரிடம் பாலாஜி தனது கையில் போட்டிருந்த ஐ.வி.ஊசியினை அகற்றுமாறு கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டு, மருத்துவப்பயன்பாட்டிற்காக வைக்கப்பட்டிருந்த கத்திரிக்கோலினை எடுத்து கழுத்தில் குத்தியுள்ளார். இதில் காயமடைந்த சூர்யா அவசர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சைப்பெற்று வருகிறார். இந்த சம்பவத்தினையடுத்து பயிற்சி மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் மருத்துவமனை முதல்வர் தேரணி ராஜன் அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தி, பாலாஜி கைது செய்யப்பட்டதாகவும், பயிற்சி மருத்துவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்றும் கூறியதால் அவர்கள் போராட்டத்தினை கைவிட்டனர்.