
சென்னையில் காவல் அதிகாரியை தாக்கிய வழக்கறிஞர் - பரபரப்பு சம்பவம்
செய்தி முன்னோட்டம்
சென்னையில் விதி மீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகளை கண்காணித்து அபராதம் விதிக்கும் பணியில் போக்குவரத்து போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்கள்.
அதிகரித்து வரும் சாலை விபத்துகளை தவிர்க்கவே இந்த நடவடிக்கையானது எடுக்கப்பட்டு வருகிறது.
இரவு நேரங்களிலும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அதன்படி, இன்று(மார்ச்.,4) அதிகாலை 1.30 மணியளவில் நினைவு சின்னம் அருகே சப் இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வந்துள்ளார்கள்.
அப்போது அந்த வழியாக பெண் ஒருவருடன் வழக்கறிஞர் பிரசன்னா வெங்கடேஷ்(27) என்பவர் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார்.
அவரை நிறுத்திய போலீசார் ஆவணங்களை கேட்டுள்ளனர். அதற்கு அவர், பின் பக்கம் ஒரு பெண் அமர்ந்திருக்கும் பொழுது நீங்கள் எப்படி என்னை நிறுத்தலாம் என்று வாக்குவாதம் செய்துள்ளார்.
வழக்குப்பதிவு
சப் இன்ஸ்பெக்டரை தாக்கிய வழக்கறிஞர் கைது
மேலும் அங்கிருந்த போலீசாரை ஒருமையில் பேசியதுமில்லாமல், சப் இன்ஸ்பெக்டர் பிரபாகரிடமும் கடும் வாக்குவாதம் செய்துள்ளார்.
இதனையடுத்து வாக்குவாதம் முற்றிய நிலையில் சப் இன்ஸ்பெக்டரின் முகத்தில் ஓங்கி குத்தியுள்ளார்.
இதில் காயமடைந்த சப் இன்ஸ்பெக்டரை சக போலீசார் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார்கள்.
இதனை தொடர்ந்து அதிகாரியை தாக்கிய வழக்கறிஞரை போலீசார் பிடித்துள்ளனர்.
அவர் வியாசர்பாடியை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ள நிலையில், அவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் மீது பணி செய்யவிடாமல் தடுத்தல், தாக்குதல், காயம் ஏற்படுத்துதல் போன்ற பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.