சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மகள் தூக்கிட்டு தற்கொலை - போலீசார் விசாரணை
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி குமரேஷ் பாபுவின் மகள், நேற்று(அக்.,4) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியான குமரேஷ் பாபு, அதிமுக முன்னாள் அமைச்சரான ஜெயக்குமார் மீதான நில அபகரிப்பு வழக்கு, அதிமுக பொதுக்குழு வழக்கு உள்ளிட்ட முக்கிய வழக்குகளை விசாரித்து அதற்கான தீர்ப்பினையும் வழங்கியவர். இவர் தற்போது சென்னை அபிராமபுரத்தில் வசித்து வருகிறார் என்று தகவல்கள் தெரிவிக்கிறது. இவருக்கு கிரா என்னும் மகள் உள்ளார். அவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில், அவர் நேற்று(அக்.,4) மாலை தனது அறையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ள காவல்துறை
இதனிடையே, தனது அறைக்கு சென்ற மகள் வெகு நேரமாகியும் வெளியில் வராததால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் அறையினை தட்டி அழைத்துள்ளனர். ஆனால் கதவு திறக்கப்படவில்லை. அதனால் அவர்கள் கதவினை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது கிரா தூக்கிட்டு தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். பின்னர் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். அங்கு கிராவை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். அதனையடுத்து அவரது உடலை பிரேத பரிசோதனை செய்ய கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறை, கிராவின் தற்கொலைக்கான காரணம் என்ன? என்பதை கண்டறிய விசாரணை மேற்கொண்டுள்ளனர்.