24 மண்டலங்களாக பிரிக்கப்படும் சென்னை மாநகராட்சி
தமிழ்நாடு மாநிலத்தின் தலைநகரான சென்னை மாநகராட்சி, 155 வார்டுகளை கொண்டு 10 மண்டலங்களாக செயல்பட்டது. இதனிடையே கடந்த 2011ம் ஆண்டு சென்னையை நாட்டின் பெருநகர பட்டியலில் சேர்க்க புறநகர் பகுதிகள் அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டு விரிவாக்கம் செய்யப்பட்டது என்று தகவல்கள் தெரிவிக்கிறது. அதன்பின்னர் சென்னை 200 வார்டுகளை கொண்டு 15 மண்டலங்களாக செயல்பட துவங்கியுள்ளது. அதன்படி விரிவாக்கம் செய்யப்பட்ட மாநகராட்சியின் வருவாய் துறை எல்லைகள் சென்னையோடு ஒருங்கிணைக்க முடிவு எடுக்கப்பட்டு காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் இருந்து குறிப்பிட்ட பகுதிகள் சென்னையோடு இணைக்கப்பட்டது என்று செய்திகள் தெரிவிக்கிறது.
அரசின் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ள கோப்புகள்
அதனை தொடர்ந்து, 23 தொகுதிகள் கொண்ட சென்னையில் 16 சட்டசபைகள் மட்டுமே செயல்பட்டு வருகிறது. மற்ற 6 சட்டசபை தொகுதிகள் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் இருக்கிறது. எனவே சட்டசபை தொகுதிகளுக்கு ஏற்றவாறு மண்டலங்களை அதிகரிக்க வேண்டும் என்று நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை மானிய கோரிக்கை விவாதத்தின் பொழுது அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார். இந்நிலையில் தற்போது 200 வார்டுகள் கொண்டு 15 மண்டலங்களாக செயல்பட்டு வரும் சென்னை மாநகராட்சி விரைவில் 24 மண்டலங்களாக மறு சீரமைப்பு செய்யப்படவுள்ளது என கூறப்படுகிறது. இதனையடுத்து சட்டசபை தொகுதிகளுக்கு ஏற்றவாறு மண்டலங்களும் அதிகரிக்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிந்த நிலையில், அதற்கான பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு அரசின் ஒப்புதலுக்காக கோப்புகள் அனுப்பப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.