93,000 தெரு நாய்களுக்கு தடுப்பூசி போட சென்னை மாநகராட்சி திட்டம்
சென்னையில் நாய் கடி சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சுமார் 93,000 நாய்களுக்கும், வெறிநாய் தடுப்பூசி மற்றும் ஒட்டுண்ணியை நீக்குவதற்கான மருந்தையும் ஊசி மூலம் செலுத்த சென்னை மாநகராட்சி முடிவெடுத்துள்ளது. இந்த சூழலில், நேற்று, திங்கட்கிழமை, நாய்களை கணக்கெடுக்கும் பணி தொடங்கியது. தெருநாய்கள் கணக்கெடுப்பு மற்றும் நாய்களுக்கான தடுப்பூசி முகாம், சென்னை கார்ப்பரேஷன்(GCC) கமிஷனர் ஜே ராதாகிருஷ்ணனால் நேற்று தொடங்கப்பட்டது. சென்னை மாநகரத்தில் உள்ள 16 மண்டலங்களில், சுமார் 120 நாட்களுக்கு இந்த இயக்கம் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், விருப்பமுள்ள தன்னார்வலர்களை பயிற்சியில் சேர அழைப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். ரேபிஸ் நோயிலிருந்தும், வெறிநாய்க்கடியில் இருந்தும் சென்னை மக்களை காப்பாற்ற, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது.
அதிகரித்துள்ள தெருநாய்கள் எண்ணிக்கை
அக்டோபர் 2018 கணக்கெடுப்பின்படி, சென்னையில் 57,366 நாய்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. மக்கள்தொகை கணக்கெடுப்புக்குப் பிறகுதான் நகரத்தில் தெருநாய்களின் எண்ணிக்கை தெரியவரும் என்றாலும், ஒவ்வொரு ஆண்டும் நாய்களின் எண்ணிக்கை 10 சதவீதம் அதிகரிக்கும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்தாண்டு, சென்னையில் உள்ள தெருநாய்கள் எண்ணிக்கை 93,000 ஐத் தாண்டும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த தடுப்பூசி செலுத்த ஒரு குழுவாக தன்னார்வலர்கள் செயல்படுவார்கள் எனவும், அந்த குழுவில், ஒரு கால்நடை மருத்துவர், நான்கு நாய் பிடிப்பவர்கள், இரண்டு உதவியாளர்கள் மற்றும் ஒரு வாகனம் அடங்கிய ஏழு பிரத்யேக குழுக்களை GCC நியமித்துள்ளது. இக்குழு, ஒவ்வொரு நாளும் சுமார் 910 தெரு நாய்களைப் பிடித்து தடுப்பூசி போடுவதை நோக்கமாகக் கொண்டு செயல்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.