சென்னை செம்பரப்பாக்கம் ஏரி - வெளியேற்றப்படும் உபரிநீரின் அளவு 1500 கனஅடியாக உயர்வு
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கி தற்போது தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் தொடர் மழை பெய்து வருவதால் நீர்நிலைகளின் நீர்மட்டம் அதிகரித்து வருவதாக செய்திகள் வெளியாகி வருகிறது. அதன்படி சென்னையிலுள்ள முக்கிய அணைகளின் நீர்மட்டமும் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், அதனை கண்காணிக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாக கூறப்பட்டது. இதற்கிடையே 24 அடி உயரம் கொண்ட சென்னை செம்பரப்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரிக்க துவங்கியுள்ளது. இந்நிலையில் நேற்று(நவ.,28)இதன் நீர்மட்டம் 22.29 அடி வரை இருந்த நிலையில் 200 கன அடி உபரி நீர் 19 கண் மதகுகளில் திறந்துவிடப்பட்டது. இன்று(நவ.,29)காலை நிலவரப்படி, தொடர் மழை காரணமாக அணையின் நீர்மட்டம் 22.35 அடியை எட்டியது.
கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தல்
இதன் காரணமாக அணையில் இருந்து வெளியற்றப்படும் உபரி நீரின் அளவு 200 கன அடியில் இருந்து 1000 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது வந்துள்ள தகவல்படி, செம்பரப்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வினாடிக்கு 1,100 கன அடியாக உள்ளது. இதன் காரணமாக அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு 1,000 கன அடியில் இருந்து 1,500 கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனையடுத்து, திருநீர்மலை, அடையாறு, திருமுடிவாக்கம், குன்றத்தூர், சிறுகளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளதோடு, பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.