சென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையேயான மின்சார ரயில் சேவை மீண்டும் துவங்கியது
தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த சரக்கு ரயில் ஒன்று நேற்று(டிச.,10) இரவு 10 மணியளவில் செங்கல்பட்டு ரயில் நிலையம் அருகில் அதாவது, பழைய தாலுகா அலுவலகம் ரயில்வே கேட் அருகில் வரும் பொழுது திடீரென தடம் புரண்டுள்ளது. இதன் காரணமாக ரயிலின் 9 பெட்டிகளும் தண்டவாளத்தில் இருந்து விலகி வெளியே வந்து மண்ணில் சரிந்து நின்றது. உடனடியாக இது குறித்த தகவல் ரயில்வே கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் ரயில்வே ஊழியர்கள் சம்பவயிடத்திற்கு விரைந்து வந்து ஜாக்கி கருவியின் உதவியோடு தண்டவாளத்தை சீர்செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
9 மணிநேர சேவை பாதிக்கப்பட்டதாக தகவல்
இதன் காரணமாக தென்மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்கள் மற்றும் செங்கல்பட்டு-சென்னை கடற்கரை வழியே இயக்கப்படும் மின்சார ரயில்களின் சேவைகள் பாதிக்கப்பட்டது. தொடர்ந்து, மீட்பு பணிகள் நடைபெற்று வந்த நிலையில் தற்போது தடம் புரண்ட 9 பெட்டிகளும் முற்றிலுமாக அகற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கிட்டத்தட்ட 9 மணிநேர சேவை பாதிக்கப்பட்ட நிலையில், இன்று(டிச.,11) மாலை முதல் மீண்டும் இந்த தடத்தில் மின்சார ரயில்கள் இயக்கப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சரக்கு ரயில் தடம் புரண்டு ரயில்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் அவ்வழியே பயணம் மேற்கொள்ளும் பயணிகள் பெரும் பாதிப்பிற்கு ஆளானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.