சென்னையில் ஒரே நாளில் அதிகரித்த காற்று மாசு: மணலியில் காற்றின் தரம் மோசம்
செய்தி முன்னோட்டம்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை மாநகரின் பல பகுதிகளிலும் நேற்றிலிருந்தே பொதுமக்கள் பட்டாசுகளை வெடிக்கத் தொடங்கியுள்ளனர். இதன் காரணமாக நகரின் ஒட்டுமொத்தக் காற்றுத் தரக் குறியீடு ஒரே நாளில் 71-ல் இருந்து 124 என்ற அளவுக்கு உயர்ந்து, மிதமான காற்று மாசு நிலையை எட்டியுள்ளது. குறிப்பாக வடசென்னைப் பகுதியான மணலியில் காற்றின் தரம் 79-ல் இருந்து 246 ஆக உயர்ந்து மிகவும் மோசமான நிலையைத் தொட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் நீண்ட நேரம் வெளியில் இருக்கும் மக்களுக்கு அசௌகரியம் ஏற்படுவதுடன், முதியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு உடல்நலக் கோளாறுகள் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
காற்று மாசு
மணலி மற்றும் ராயபுரத்தில் எகிறிய காற்றின் மாசு அளவு
மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் காலை நிலவரப்படி மணலியில் காற்றின் தரம் 246 என்ற அபாயகரமான அளவை எட்டியுள்ளது.
அதேபோல் ராயபுரத்தில் காற்றுத் தரக் குறியீடு 153 ஆகப் பதிவாகியுள்ளது. இதன் காரணமாக ஆஸ்துமா, நுரையீரல் பிரச்னைகள் மற்றும் இதய நோய் உள்ளவர்களுக்கும், சிறு குழந்தைகளுக்கும் கடுமையான சுவாசக் கோளாறுகள் மற்றும் மூச்சுத்திணறல் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளது.
எனவே, முதியவர்கள் மற்றும் சுவாசப் பாதிப்பு உள்ளவர்கள் தேவையின்றி வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும், பாதுகாப்பு வழிமுறைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும் என்றும் மருத்துவ நிபுணர்கள் தீவிரமாக எச்சரித்துள்ளனர்.
பிற பகுதிகளின் நிலவரம்
மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் எச்சரிக்கை
அரும்பாக்கம், கொடுங்கையூர், பெருங்குடி மற்றும் வேளச்சேரி ஆகிய பிற பகுதிகளில் தற்போதைக்குக் காற்றின் தரம் திருப்திகரமான அளவிலேயே நீடிக்கிறது.
எனினும், தீபாவளி பண்டிகை தினமான இன்று மாலை பொதுமக்கள் முழுவீச்சில் பட்டாசுகளை வெடிக்கத் தொடங்கும்போது, சென்னையின் ஒட்டுமொத்தக் காற்றின் தரம் மேலும் கணிசமாகக் குறைய வாய்ப்புள்ளதாக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் எச்சரித்துள்ளது.
காற்று மாசின் தாக்கத்தைக் குறைக்கும் வகையில் பொதுமக்கள் குறைந்த புகையை வெளிப்படுத்தும் பசுமைப் பட்டாசுகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனவும், குறிப்பிட்ட நேரக் கட்டுப்பாடுகளைப் பின்பற்றிப் பட்டாசுகளை வெடிக்க வேண்டும் எனவும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.