Loading...
"மெடிக்கல் ஷாப்பில் ஏமாறாதீங்க..." மருந்துகளின் அசல் விலையை மொபைலிலேயே அறியலாம்! மத்திய அரசின் பார்மா சஹி தாம் ஆப் பயன்படுத்துவது எப்படி?
மருந்துகளின் அசல் விலையை மொபைலிலேயே அறியலாம்

"மெடிக்கல் ஷாப்பில் ஏமாறாதீங்க..." மருந்துகளின் அசல் விலையை மொபைலிலேயே அறியலாம்! மத்திய அரசின் பார்மா சஹி தாம் ஆப் பயன்படுத்துவது எப்படி?

எழுதியவர் Sekar Chinnappan
Jul 20, 2026
05:17 pm

செய்தி முன்னோட்டம்

ஆன்லைனிலோ அல்லது நேரடியாக மருந்தகங்களிலோ மருந்துகளை வாங்கும் போது நாம் சரியான விலையைத்தான் கொடுக்கிறோமா என்பது பலருக்கும் தெரிவதில்லை. ஒரே வேதிப்பொருள் கொண்ட மருந்து, வெவ்வேறு நிறுவனங்களால் வெவ்வேறு விலைகளில் விற்கப்படுகிறது. இதைக் கண்காணித்து பொதுமக்களை பாதுகாக்க, மத்திய ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய மருந்துகள் விலை நிர்ணய ஆணையம் (NPPA) பார்மா சஹி தாம் (Pharma Sahi Daam) என்ற பிரத்யேக மொபைல் செயலி மற்றும் இணையதள சேவையை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வழங்கியுள்ளது.

பார்மா சஹி தாம்

பார்மா சஹி தாம் என்றால் என்ன?

இது பொதுமக்களுக்காக உருவாக்கப்பட்ட ஒரு இலவச விலை கண்காணிப்புத் தளமாகும்.

இதன் மூலம் மத்திய அரசால் விலை கட்டுப்பாடு விதிக்கப்பட்ட மற்றும் கட்டுப்பாடு இல்லாத அனைத்து மருந்துகளின் அரசாங்க அங்கீகாரம் பெற்ற அதிகபட்ச சில்லறை விலையை பொதுமக்கள் எளிதாகத் தெரிந்துகொள்ளலாம்.

மேலும், நீங்கள் வாங்கும் அதே வீரியம் கொண்ட மாற்று பிராண்ட் மருந்துகள் சந்தையில் என்னென்ன விலைகளில் கிடைக்கின்றன என்பதையும் இதில் மிகத் துல்லியமாக ஒப்பிட்டுப் பார்த்துத் தெரிந்துகொள்ள முடியும்.

செயலி

செயலி பதிவிறக்கம் மற்றும் மருந்துகளைத் தேடும் முறை

ஆன்லைனில் மருந்து விலையை சரிபார்ப்பதற்கு முதன்முதலாக நீங்கள் செய்ய வேண்டியது, கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருந்து அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ பார்மா சஹி தாம் செயலியைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும் அல்லது அதன் அதிகாரப்பூர்வ NPPA இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.

செயலியைத் திறந்தவுடன் அதில் உள்ள தேடல் கட்டத்தில், உங்களுக்குத் தேவையான மருந்தின் பெயர் அல்லது அதில் கலந்துள்ள வேதிப்பொருளின் பெயரைத் துல்லியமாக உள்ளிட்டுத் தேட வேண்டும்.

ADVERTISEMENT

விலை ஒப்பீடு

அரசு நிர்ணயித்த விலையுடன் பில்லை ஒப்பிட்டுப் பார்த்தல்

அதனைத் தொடர்ந்து, உங்கள் திரையில் தோன்றும் அந்த குறிப்பிட்ட மருந்திற்கான அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட அதிகபட்ச உச்ச வரம்பு விலையை, நீங்கள் மெடிக்கல் ஷாப்பில் வாங்கும் பில் விலையுடன் ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளலாம்.

இறுதியாக, அதே வேதிப்பொருள் கலவையில் சந்தையில் குறைந்த விலையில் கிடைக்கும் பிற நிறுவனங்களின் மாற்று மருந்துகளின் விபரங்களையும் நீங்கள் இதன் மூலம் சரிபார்க்கலாம்.

ஆனால், இந்த மாற்று மருந்தை வாங்குவதற்கு முன்னால் உங்களது குடும்ப மருத்துவரிடம் ஒருமுறை ஆலோசிப்பது மிகவும் அவசியமாகும்.

ADVERTISEMENT

முக்கியத்துவம்

மருந்து விலையை சரிபார்ப்பது ஏன் அவசியம்?

ஒரே மருத்துவக் குணம் கொண்ட மூலப்பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் மருந்துகள், வெவ்வேறு மருந்து நிறுவனங்களால் வெவ்வேறு பிராண்ட் பெயர்களில் விலை வித்தியாசத்துடன் விற்கப்படுகின்றன.

செயலி மூலம் விலையை சரிபார்ப்பதன் மூலம், அதே வீரியம் கொண்ட குறைந்த விலை மாற்று மருந்துகளை நாம் கண்டறிய முடியும்.

இது பொதுமக்களின் மாதாந்திர மருந்து செலவை பெருமளவில் குறைப்பதுடன், மருந்து விற்பனையில் வெளிப்படைத்தன்மையை அதிகரித்து மெடிக்கல் ஷாப்கள் கூடுதல் விலை வைத்து பொதுமக்களை ஏமாற்றுவதைத் தடுக்கிறது.

புகார்

கூடுதல் விலை வசூலித்தால் தாராளமாகப் புகார் அளிக்கலாம்

பார்மா சஹி தாம் தளம் மருந்துகளின் விலையைக் காட்டுவதோடு மட்டுமல்லாமல், பொதுமக்கள் தங்களின் உரிமைகளை பாதுகாத்துக் கொள்ளும் ஆயுதமாகவும் செயல்படுகிறது.

ஏதேனும் ஒரு மருந்தகம் அல்லது ஆன்லைன் தளம், அரசாங்கம் நிர்ணயித்துள்ள அதிகபட்ச உச்ச வரம்பு விலையை விடக் கூடுதல் விலைக்கு மருந்துகளை விற்றால், பொதுமக்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட பில் ஆதாரத்துடன் இந்த செயலி மூலமாகவே நேரடியாகத் தேசிய மருந்துகள் விலை நிர்ணய ஆணையத்திடம் ஆன்லைனில் உடனடியாகப் புகார் அளிக்க முடியும்.

ADVERTISEMENT