பொங்கல் பரிசுத்தொகுப்பு குறித்து மீண்டும் ஆலோசனை நடத்திய முதல்வர்-டோக்கன் விநியோகிக்கும் தேதியில் மாற்றம்
வரும் 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் 14ம் தேதி பொங்கல் பண்டிகை வருவதையொட்டி, தமிழக அரசு சார்பில் வழக்கம் போல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை மற்றும் ரூ,1000 ரொக்கமாக வழங்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டிருந்தார். மேலும் இந்த பரிசுத்தொகுப்பு வழங்குவதை சென்னையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜனவரி 2ம் தேதி துவக்கி வைப்பதாகவும் அதே நாளில், அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட அமைச்சர்கள் துவங்கி வைப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், பொங்கல் பரிசுத்தொகுப்பில் கரும்பினை சேர்க்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சியினர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.
ஜனவரி 3முதல் 8ம் தேதி வரை டோக்கன் விநியோகம் செய்யப்படும்
கரும்பு விவசாயிகளும் இது குறித்து கண்டனம் தெரிவித்து வந்த நிலையில், தங்களிடம் கரும்புகளை கொள்முதல் செய்து பரிசுத்தொகுப்பில் இணைத்து விநியோகம் செய்ய வேண்டும் என்று கோரிக்கையும் வைத்தனர். இதனையடுத்து மீண்டும் தலைமை செயலத்தில் தமிழக முதல்வர் ஆலோசனை நடத்தினார். அதன்படி, பரிசுத்தொகுப்பில் ஒரு முழு கரும்பும் வழங்கப்படும் என்று முதல்வர் முடிவு செய்து உத்தரவிட்டுள்ளார். முன்னதாக, இதற்கான டோக்கன் இம்மாத கடைசியிலும், ஜனவரி 2,3,4 தேதிகளில் வழங்கப்படும் என்று கூறியிருந்த நிலையில், தற்போது டோக்கன் விநியோகம் ஜனவரி 3ம் தேதி முதல் 8ம் தேதி வரை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, தமிழக முதல்வர் ஜனவரி 9ம் தேதி பரிசுத்தொகுப்பு வழங்கும் நிகழ்வை துவக்கி வைப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.