சென்னை கிண்டி பல்நோக்கு மருத்துவமனையை திறந்து வைப்பதில் மாற்றம்
செய்தி முன்னோட்டம்
கடந்த 2021ம்ஆண்டு ஜூன் 3ம்தேதி மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 97வது பிறந்தநாளன்று சென்னை கிண்டியில் உள்ள கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் பல்நோக்கு மருத்துவமனை கட்டப்போவதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து, தரைத்தளத்துடன் கூடிய 6 தளங்கள் கொண்ட 3 கட்டிடங்கள் 4.89ஏக்கர் நிலத்தில் சுமார் 51,429ச.மீ.,பரப்பளவில் பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையினை தமிழக அரசு கட்டியுள்ளது.
இதன்படி இந்த மருத்துவமனையின் 'ஏ'பிளாக்கில் ரூ.78கோடியில் 16,736 பரப்பளவில் நிர்வாக கட்டிடம் மற்றும் புறநோயாளிகள் சிகிச்சைப்பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.
'பி'பிளாக்கில் ரூ.78கோடியில் 18,725 பரப்பளவில் அறுவை சிகிச்சை பிரிவுக்கான கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.
தொடர்ந்து, 'சி'பிளாக்கில் 15,968 பரப்பளவில் ரூ.74கோடியில் கதிரியக்க நோய்க்கான பிரிவு வார்டுகளுடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
திறப்பு விழா
குடியரசு தலைவரின் வெளிநாடு பயணம்
இதன் கட்டுமான பணிகள் முடிவடைந்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஏப்ரல் 8ம் தேதி குடியரசு தலைவர் திரவுபதி முர்மு அவர்களை நேரில் டெல்லி சென்று சந்தித்து மருத்துவமனையினை திறந்து வைக்குமாறு அழைப்பு விடுத்திருந்தார்.
ஜூன் 5ம் தேதி இதன் திறப்புவிழா நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு அழைப்பிதழ்கள் அச்சடிக்கப்பட்டு, விழாவுக்கான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்துவந்தது.
ஆனால் தற்போது இந்த நிகழ்வானது ரத்தாகியுள்ளது என்று செய்திகள் தெரிவிக்கிறது.
குடியரசு தலைவர் குறிப்பிட்ட தேதியில் வெளிநாடு பயணம் மேற்கொள்ளவுள்ளதால் மருத்துவமனை வரும் ஜூன் 20ம் தேதி திறக்கப்படும் என்று தமிழக மருத்துவத்துறை சார்பில் கூறப்பட்டுள்ளது.
எனினும். இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.