இஸ்ரோ விஞ்ஞானிகளுடன் உரையாட பெங்களூர் வந்தார் பிரதமர் மோடி
சந்திரயான்-3 திட்டத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து, அந்த திட்டத்தை வெற்றிகரமாக முடித்த இஸ்ரோ விஞ்ஞானிகளை வாழ்த்துவதற்காக இன்று(ஆகஸ்ட் 26) பெங்களூரு வந்தார் பிரதமர் மோடி. சந்திரயான்-3 திட்டத்தில் பணிபுரிந்து வரும் விஞ்ஞானிகள் குழுவுடன் இன்று அவர் உரையாடும் போது உணர்ச்சிவசப்பட்டார். பெங்களுருவில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சியின் கட்டளை மையத்தில் பேசிய பிரதமர் மோடி, "தற்போது நிலவில் இந்தியா உள்ளது. நமது நாட்டின் பெருமை நிலவில் வைக்கப்பட்டுள்ளது" என்று கூறினார். "சந்திரயான்-3 திட்டத்தின் வெற்றி இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி வரலாற்றில் ஒரு மிகப்பெரும் தருணமாகும்" என்று அவர் மேலும் கூறினார். 40 நாள் பயணத்திற்குப் பிறகு, சந்திரயான் -3இன் லேண்டரான 'விக்ரம்', கடந்த புதன்கிழமை மாலை, சந்திரனின் தென் துருவத்தில் மென்மையாக தரையிறங்கியது.
பிரதமர் மோடியின் மூன்று முக்கிய அறிவிப்பு
இதனையடுத்து, அறியப்படாத நிலவின் தென் துருவத்தைத் தொட்ட முதல் நாடு என்ற பெருமை இந்தியாவுக்கு கிடைத்துள்ளது. மேலும், நிலவில் உள்ள இரண்டு இடங்களுக்கு பிரதமர்-மோடி இன்று பெயரிட்டார். சந்திரயான்-3 வெற்றிகரமாக தரையிறக்கப்பட்ட இடம் இனி, 'சிவசக்தி புள்ளி' என்று அழைக்கப்பட உள்ளது. கூடுதலாக, 2019இல் சந்திரயான்-2 நிலவில் விபத்துக்குள்ளான புள்ளிக்கு 'திரங்கா புள்ளி'(மூவர்ண புள்ளி) என்று பெயரிடப்பட்டுள்ளது. இது தவிர, மேலும் ஒரு முக்கிய அறிவிப்பையும் பிரதமர்-மோடி இன்று அறிவித்தார். சந்திரயான்-3 நிலவில் தரையிறங்கிய தேதி, அதாவது ஆகஸ்ட்-23, இனி தேசிய விண்வெளி தினமாக கொண்டாடப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். "அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை கொண்டாடும் நாளாக இது இருக்கும். மேலும் இது இளம் தலைமுறைகளையும் ஊக்குவிக்கும்" என்று பிரதமர்-மோடி கூறினார்.