3-வது குழந்தை பெற்றால் ₹30,000! ஆந்திராவில் பிறப்பு விகிதத்தை அதிகரிக்கச் சந்திரபாபு நாயுடு திட்டம்!
செய்தி முன்னோட்டம்
மாறிவரும் மக்கள் தொகைச் சூழலைக் கருத்தில் கொண்டு, ஆந்திராவில் 3-வது மற்றும் 4-வது குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளும் பெற்றோருக்குப் பிரம்மாண்ட ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. "குழந்தைகள் சுமையல்ல, அவர்கள் மாநிலத்தின் சொத்து" எனக் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, இந்த புதிய மக்கள் தொகை நிர்வாக மந்திரத்தை முன்வைத்துள்ளார்.
ஆந்திர அரசு அறிவிப்பு
மக்கள் தொகை பெருக்கம்
கடந்த சில தசாப்தங்களாகப் பின்பற்றப்பட்டு வந்த மக்கள் தொகைக் கட்டுப்பாட்டுக் கொள்கைகளுக்கு முற்றிலுமாக முற்றுப்புள்ளி வைத்து, பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும் நோக்கில் ஆந்திரப் பிரதேச அரசு புதிய அறிவித்துள்ளது. அரசுப் பொதுக்கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, மாநிலத்தின் எதிர்கால இளைஞர் சக்தியைக் காக்க ஊக்கத்தொகைத் திட்டத்தை அறிவித்தார். குடும்பத்தில் மூன்றாவது குழந்தை பிறந்தால் ரூ. 30,000-மும், நான்காவது குழந்தை பிறந்தால் ரூ. 40,000-மும் அரசு சார்பில் ரொக்க ஊக்கத்தொகையாக வழங்கப்படும். இடைத்தரகர்களும் இன்றி, நேரடியாகத் தாயின் வங்கிக் கணக்கிற்கே மாற்றப்படும். வெறும் ரொக்க உதவி மட்டுமின்றி, குழந்தைகளின் பாதுகாப்பு, கல்வி மற்றும் ஊட்டச்சத்தை உறுதி செய்யச் சிறப்புத் திட்டங்கள் வகுக்கப்பட்டு வருவதாகவும், ஆகஸ்ட் மாதத்திற்குள் இந்தத் திட்டம் அமல்படுப்படும் என்று தெரிவித்தார்.
தாய்க்கு வந்தனம் திட்டம்
பிறப்பு விகிதம்
தென்னிந்தியாவில், குறிப்பாக ஆந்திராவில் பிறப்பு விகிதம் கணிசமாகக் குறைந்து வருவதை விஞ்ஞான ரீதியாக விளக்கிய சந்திரபாபு நாயுடு, "சிறிய குடும்பங்களின் மோகம் காரணமாக வேலை செய்யும் இளைஞர்களின் எண்ணிக்கை குறைந்து, எதிர்காலத்தில் ஆந்திரா முதியவர்கள் மட்டுமே வாழும் மாநிலமாக மாறும் ஆபத்து உள்ளது. முன்பு நானே மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தக் கூறினேன், ஆனால் மாறிவரும் உலகச் சூழலில் உற்பத்தித்திறனை அதிகரிக்க மக்கள் தொகையைப் பெருக்க வேண்டிய கட்டாயம் நமக்கு ஏற்பட்டுள்ளது" என்று கவலை தெரிவித்தார். மேலும், தற்போதைய 'தாய்க்கு வந்தனம்' திட்டத்தின் கீழ் கல்விக்காக வழங்கப்படும் ரூ. 15,000 நிதியுதவி எதிர்காலத்தில் மேலும் அதிகரிக்கப்படும் என்றும் அவர் வாக்குறுதி அளித்தார்.