ஜார்கண்ட் முதல்வர் சம்பாய் சோரன் ராஜினாமா; ஹேமந்த் ஆட்சி அமைக்க உரிமை கோரினார்
ஜார்கண்ட் முதல்வர் சம்பாய் சோரன் புதன்கிழமை மாலை ராஞ்சியில் ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணனிடம் தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார். அதனைத்தொடர்ந்து ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) செயல் தலைவர் ஹேமந்த் சோரன் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். ராஜினாமா செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய சம்பாய், "சில நாட்களுக்கு முன், என்னை முதல்வராக்கி, மாநில பொறுப்பு அளித்தனர். தற்போது ஹேமந்த் சோரன் திரும்பிய பின், எங்கள் கூட்டணி இந்த முடிவை எடுத்தது, ஹேமந்த் சோரனை தலைவராக தேர்வு செய்தோம்" என்றார். முன்னதாக, நில மோசடி தொடர்பாக அமலாக்க இயக்குநரகத்தால் கைது செய்யப்பட்ட பின்னர் ஹேமந்த் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, 67 வயதான ஜேஎம்எம் தலைவர் சம்பாய், பிப்ரவரி 2 அன்று முதலமைச்சராகப் பதவியேற்றார்.
ஹேமந்த் ஆட்சி அமைக்க உரிமை கோர ஆளுநரை சந்தித்தார்
ஆட்சி அமைக்க உரிமை கோருவதற்காக ஆளுநரை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய ஹேமந்த், "முதல்வர் (சம்பை சோரன்) உங்களிடம் எல்லாவற்றையும் சொல்லிவிட்டார்.. எல்லாவற்றையும் விரிவாகச் சொல்வோம். அனைத்து நடைமுறைகளையும் பின்பற்றியுள்ளோம்" என்றார். ஹேமந்த் முதல்வராக பொறுப்பேற்க அழைக்கப்பட்டால், ஜார்கண்ட் மாநிலத்தின் 13வது முதல்வராக அவர் பதவியேற்பார். தகவல்களின்படி, JMM , காங்கிரஸ் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் (RJD) கூட்டணியின் எம்எல்ஏக்கள் மற்றும் தலைவர்களிடையே ஒருமித்த கருத்துக்கு பிறகு ஹேமந்த் புதன்கிழமை சட்டமன்ற கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.