நேரடியாகத் தக்காளியைக் கொள்முதல் செய்து குறைந்த விலையில் விற்பனை செய்யவிருக்கும் மத்திய அரசு
இந்தியாவின் பல நகரங்களில் தொடர்ந்து அதிக விலையில் தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருவதைத் தொடர்ந்து, விலை அதிகமாக விற்பனை செய்யப்படும் இடங்களில் மத்திய அரசே குறைந்த விலையில் தக்காளியை விற்பனை செய்யத் திட்டமிட்டிருக்கிறது. டெல்லி, பாட்னா மற்றும் லக்னோ ஆகிய நகரங்களில் ரூ.90 என்ற விலையில் தக்காளியை விற்பனை செய்யத் தொடங்கியது மத்திய அரசு. அதனைத் தொடர்ந்து, அதிக விலையில் தக்காளி விற்பனை செய்யப்படும் நகரங்களில் ரூ.80 என்ற குறைந்த விலையில் தக்காளியை விற்பனை செய்யத் துவங்குகிறது மத்திய அரசு. இந்த குறைந்த விலை தக்காளி விற்பனையை தேசிய வேளான் கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு மற்றும் தேசிய நுகர்வோர் கூட்டுறவு கூட்டமைப்பு ஆகிய அமைப்புகள் மேற்பார்வையிடயிருக்கின்றன.
விலை குறையும் தக்காளி?
மத்திய அரசே நேரடியாதத் தக்காளியைக் கொள்முதல் செய்து விற்பனை செய்யத் திட்டமிட்டதையடுத்து, தக்காளியின் மொத்த விற்பனை விலை குறைந்திருக்கிறது. திங்கட்கிழமை முதல், ஒவ்வொரு நகரத்திலும் தக்காளி விற்பனையாகும் விலையைப் பொறுத்து, அந்த நகரங்களில் தக்காளியை தாங்களே நேரடியாக விற்பனை செய்வதைப் பற்றி மத்திய அரசு முடிவெடுக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது நுகர்வோர் நலத்துறை வெளியிட்டிருக்கும் சேகரித்திருக்கும் தகவல்களின் படி, நேற்று இந்தியாவில் அதிகபட்சமாக ஹாபூரில் ரூ.250 விலையிலும், டெல்லியில் ரூ.178 விலையிலும், மும்பையில் ரூ.150 விலையிலும், சென்னையிலும் ரூ.132 விலையிலும் தக்காளி விற்பனை செய்யப்பட்டிருக்கிறது. சராசரியாக ரூ.116.86 என்ற விலையில் நாடு முழுவதும் தக்காளி தற்போது விற்பனையாகி வருவதாகவும் நுகர்வோர் நலத்துறை சேகரித்த தகவல்களின் அடிப்படையில் கணக்கிடப்பட்டிருக்கிறது.