
ராம நவமி பிரச்சனை: அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுரை
செய்தி முன்னோட்டம்
ராம நவமி மோதல்களால் பல்வேறு மாநிலங்களில் பிரச்சனை நடந்து கொண்டிருக்கும் நிலையில், ஹனுமன் ஜெயந்தியை முன்னிட்டு மாநிலங்களுக்கு உள்துறை அமைச்சகம் இன்று(ஏப் 5) அறிவுரை வழங்கியுள்ளது.
மேற்கு வங்கம் மற்றும் பீகார் மாநிலங்களில் கடந்த வாரம் நடந்த ராம நவமி கொண்டாட்டத்தில் வன்முறை சம்பவங்கள் வெடித்தன.
இந்நிலையில், "ஹனுமன் ஜெயந்திக்கு தயாராகும் வகையில் அனைத்து மாநிலங்களுக்கும் MHA அறிவுரை வெளியிட்டுள்ளது. சட்ட ஒழுங்கு பேணப்படுவதையும், பண்டிகை அமைதியாகக் கடைப்பிடிக்கப்படுவதையும், சமுதாயத்தில் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் காரணிகளைக் கண்காணிப்பதையும் உறுதி செய்ய அரசாங்கங்கள் ஊக்குவிக்கப்படுகின்றன." என்று உள்துறை அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்தியா
பீகார் மற்றும் மேற்கு வங்கத்தில் இணையம் துண்டிக்கப்பட்டுளளது
பீகார் மற்றும் மேற்கு வங்கத்தில் வன்முறை சம்பவங்கள் பதிவாகியதையடுத்து,அந்த இரு மாநிலங்களும் அறிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை, ஹவுராவில்(மேற்கு வங்கம்) நடந்த ராம நவமி ஊர்வலத்தின் போது இரு குழுக்களிடையே மோதல் ஏற்பட்டதால், பல வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டு, கடைகள் சூறையாடப்பட்டன.
காவல்துறை மற்றும் கலகக் கட்டுப்பாட்டுப் படைகள் குவிக்கப்பட்ட போதிலும் மறுநாள் அந்தப் பகுதியில் மேலும் புதிய வன்முறைகள் வெடித்தன.
அதன் பின், 30க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
பீகாரில், ராம நவமி கொண்டாட்டத்தின் போது வன்முறை மோதல்கள் வெடித்ததை அடுத்து, குறைந்தபட்சம் 10 மத்திய ஆயுதப் படைகள் பீகாருக்கு அனுப்பப்பட்டன.