இந்தியாவின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவின் பதவிக் காலம் நீட்டிப்பு
மூத்த வழக்கறிஞரும் சொலிசிட்டர் ஜெனரலுமான துஷார் மேத்தாவின் பதவிக் காலம் மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதோடு, உச்ச நீதிமன்றத்தின் ஆறு கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல்களுக்கும்(ASG) மறு நியமனம் வழங்கப்பட்டுள்ளது. மேத்தாவின் பதவிக்காலம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் உள்ள மற்ற சட்ட அதிகாரிகளின் பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்தது. இதனையடுத்து, அமைச்சரவையின் நியமனக் குழு(ஏசிசி) இன்று இந்த முடிவை எடுத்துள்ளது. உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பாக வாதிடும் தலைமை வழக்கறிஞர் பொதுவாக சொலிசிட்டர் ஜெனரல் என்று அழைக்கப்படுகிறார். மேத்தா அக்டோபர் 2018 முதல் இந்தியாவின் சொலிசிட்டர் ஜெனரலாக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மூன்று ASGக்கள் மீண்டும் நியமிக்கப்படவில்லை
ஏசிசியின் உத்தரவின் படி, சொலிசிட்டர் ஜெனரலின் பதவிக் காலம் மூன்று ஆண்டுகளுக்கு அல்லது அடுத்த உத்தரவு வரும் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விக்ரம்ஜீத் பானர்ஜி, கே.எம். நடராஜ், பல்பீர் சிங், சூர்யபிரகாஷ் வி ராஜு, என். வெங்கட்ராமன் மற்றும் ஐஸ்வர்யா பதி ஆகியோர் மீண்டும் உச்ச நீதிமன்றத்திற்கு நியமிக்கப்பட்ட ஆறு கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல்கள் ஆவர். மாதவி திவான், சஞ்சய் ஜெயின் மற்றும் ஜெயந்த் கே சுட் ஆகிய மூன்று ASGக்களை மீண்டும் நியமிப்பதற்கான எந்த உத்தரவும் இன்னும் வெளியிடப்படவில்லை. அவர்களின் பதவிக்காலமும் நேற்றுடன் முடிவடைந்துவிட்டது.