இயற்கை எரிவாயு விநியோகக் கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கம்; மத்திய அரசு உத்தரவு
செய்தி முன்னோட்டம்
மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து திரவ இயற்கை எரிவாயு (எல்என்ஜி) வரத்து மீண்டும் வழக்கம் போல் சீராகத் தொடங்கியுள்ளதால், எரிவாயு விநியோகஸ்தர்கள் மீது விதிக்கப்பட்டிருந்த அனைத்துக் கட்டுப்பாடுகளையும் மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற்றுள்ளதாகப் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் சனிக்கிழமை (ஜூலை 4) வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவித்துள்ளது. முன்னதாக கடந்த மார்ச் மாதத்தில் ஹார்முஸ் ஜலசந்தியில் ஏற்பட்ட கப்பல் போக்குவரத்து இடையூறுகள் காரணமாக எல்என்ஜி இறக்குமதி பாதிக்கப்பட்டதால், முன்னுரிமை அல்லாத துறைகளுக்கான எரிவாயுவை முக்கிய தேவைகளுக்கு திருப்பிவிடும் அவசரகால நடவடிக்கையை மத்திய அரசு அமல்படுத்தியிருந்தது.
பெட்ரோல் டீசல்
பெட்ரோல் மற்றும் டீசல் ஏற்றுமதி வரிகளில் அதிரடி மாற்றம்
இதன் தொடர்ச்சியாக, சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப டீசல் மற்றும் விமான எரிபொருள் மீதான விண்ட்ஃபால் ஏற்றுமதி வரிகளைக் குறைத்துள்ள மத்திய அரசு, உள்நாட்டுத் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக பெட்ரோல் ஏற்றுமதி வரியை உயர்த்தியுள்ளது. இதன்படி டீசல் ஏற்றுமதி வரி லிட்டருக்கு 14 ரூபாயில் இருந்து 8.5 ரூபாயாகவும், விமான எரிபொருள் வரி லிட்டருக்கு 12.5 ரூபாயில் இருந்து 7.5 ரூபாயாகவும் குறைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், உள்நாட்டில் தட்டுப்பாடு ஏற்படுவதைத் தடுக்க பெட்ரோல் ஏற்றுமதி வரி லிட்டருக்கு 1.5 ரூபாயில் இருந்து 4 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
விலையில் மாற்றமில்லை
உள்நாட்டு சில்லறை விலையில் மாற்றமில்லை என உறுதி
பொதுமக்கள் மத்தியில் விலையேற்றம் குறித்த கவலைகள் எழுந்துள்ள நிலையில், உள்நாட்டுப் பயன்பாட்டிற்கான பெட்ரோல் மற்றும் டீசல் மீதான தற்போதைய கலால் வரி விகிதங்களில் எந்தவொரு மாற்றமும் செய்யப்படவில்லை என்று மத்திய பெட்ரோலிய அமைச்சகம் மிகத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது. இதன் காரணமாக உள்ளூர் சில்லறை விற்பனை விலையில் எந்தப் பாதிப்பும் இருக்காது என்பது உறுதியாகியுள்ளது. மேலும், அமெரிக்கா மற்றும் ஈரான் போரால் ஏற்பட்ட உலகளாவிய விநியோக சங்கிலித் தடையால் விதிக்கப்பட்டிருந்த பெட்ரோல், டீசல் விற்பனைக் கட்டுப்பாடுகளும் கடந்த ஜூலை 1 முதல் முழுமையாக நீக்கப்பட்டுள்ளன.
நஷ்டம்
எண்ணெய் நிறுவனங்களுக்கு நஷ்டம்
மத்திய கிழக்கு நாடுகளின் போர் காரணமாகச் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்த போதிலும், இந்தியாவில் பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் பெட்ரோல், டீசல் மற்றும் எல்பிஜி சிலிண்டர்கள் அடக்க விலையை விடக் குறைவாகவே விற்பனை செய்யப்பட்டன. இதன் காரணமாக, கடந்த ஜூன் 30 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் மட்டும் பொதுத்துறை எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் சுமார் 74,781 கோடி ரூபாய் என்ற அளவிலான நிதி இழப்பை சந்தித்துள்ளதாக மத்திய எண்ணெய் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி நாடாளுமன்ற விவகாரங்களின் போது விளக்கியுள்ளார்.
கச்சா எண்ணெய்
கச்சா எண்ணெய் விலை சரிவும் எதிர்கால நிலவரமும்
சர்வதேச சந்தையில் கடந்த சில வாரங்களாகக் கச்சா எண்ணெய் விலை படிப்படியாகக் குறைந்து வந்தாலும், எண்ணெய் நிறுவனங்கள் இன்னும் தங்களது இழப்பிலிருந்து முழுமையாக மீளவில்லை என்று அமைச்சர் பூரி விளக்கியுள்ளார். பொதுவாக எண்ணெய் நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான கச்சா எண்ணெயை குறைந்தது 2 மாதங்களுக்கு முன்பே ஆர்டர் செய்து வாங்குவது வழக்கம். எனவே, தற்பொழுது சுத்திகரிக்கப்படும் கச்சா எண்ணெய் அனைத்தும் சர்வதேச விலை உச்சத்தில் இருந்த ஏப்ரல் அல்லது மே மாத தொடக்கத்தில் வாங்கப்பட்டவை என்பதால், அதன் தாக்கம் சந்தையில் குறைய இன்னும் சில வாரங்கள் ஆகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.