ஆன்லைன் சூதாட்டத்திற்கு முற்றுப்புள்ளி! 300 பெட்டிங் ஆப்ஸ் மற்றும் வெப்சைட்கள் முடக்கம்; விதிமீறினால் 7 ஆண்டு சிறை
செய்தி முன்னோட்டம்
இந்தியாவில் சட்டவிரோத ஆன்லைன் சூதாட்டம் மற்றும் பெட்டிங் தளங்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய அரசு அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இதன்படி, சூதாட்டம் மற்றும் பெட்டிங் தொடர்பான மேலும் 300 இணையதளங்கள் மற்றும் ஆப்ஸ்களை மத்திய அரசு முடக்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம், இதுவரை முடக்கப்பட்ட இத்தகைய தளங்களின் மொத்த எண்ணிக்கை 8,400 ஆக உயர்ந்துள்ளது. குறிப்பாக, சட்டா மற்றும் மட்கா நெட்வொர்க்குகளுடன் தொடர்புடைய தளங்கள் மீது இந்த நடவடிக்கை பாய்ந்துள்ளது.
ஆன்லைன் கேமிங்
ஆன்லைன் கேமிங் ஒழுங்குமுறைச் சட்டம் 2025
கடந்த ஆகஸ்ட் 22, 2025 அன்று நிறைவேற்றப்பட்டு, அக்டோபர் 1 முதல் அமலுக்கு வந்துள்ள ஆன்லைன் கேமிங் மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறைச் சட்டம் இந்த நடவடிக்கைகளுக்குப் பலம் சேர்த்துள்ளது. சுரண்டல் தன்மையுள்ள பணப்பந்தய விளையாட்டுகளை தடை செய்வதும், அதே சமயம் இ-ஸ்போர்ட்ஸ் மற்றும் சமூக விளையாட்டுகளை ஊக்குவிப்பதும் இச்சட்டத்தின் நோக்கமாகும். பணப்பந்தயம் அல்லது பணத்தைத் திரும்பப் பெறும் வாய்ப்புள்ள எந்தவொரு ஆன்லைன் விளையாட்டும் (திறமை அல்லது அதிர்ஷ்டம் எதுவாக இருந்தாலும்) இச்சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்டுள்ளது.
அபராதம்
மீறுபவர்களுக்குக் கடும் சிறை மற்றும் அபராதம்
புதிய சட்டத்தின் கீழ் விதிமீறல்களில் ஈடுபடுவோருக்குப் பாரதிய நியாய சன்ஹிதா பிரிவுகளின் கீழ் கடுமையான தண்டனைகள் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. அங்கீகரிக்கப்படாத சூதாட்டங்கள் மற்றும் பொருளாதாரக் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம். பணப்பந்தய விளையாட்டுகளை வழங்கினால் 3 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.1 கோடி அபராதம். இதனை விளம்பரப்படுத்தினால் 2 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.50 லட்சம் அபராதம் விதிக்கப்படும். மீண்டும் இதே குற்றத்தைச் செய்தால் அபராதம் ரூ.2 கோடி வரை உயரும்.
ஆணையம்
இந்திய ஆன்லைன் கேமிங் ஆணையம்
ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குமுறைப்படுத்த இந்திய ஆன்லைன் கேமிங் ஆணையம் என்ற டிஜிட்டல் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இது ஒரு சிவில் நீதிமன்றத்திற்கு இணையான அதிகாரங்களைக் கொண்டது. எந்தெந்த விளையாட்டுகள் பணப்பந்தய வகையைச் சேர்ந்தவை என்பதை இந்த ஆணையம் தீர்மானிக்கும். அங்கீகரிக்கப்பட்ட இ-ஸ்போர்ட்ஸ் மற்றும் சமூக விளையாட்டுகளைப் பதிவு செய்து, அவற்றுக்கு 5 ஆண்டுகாலச் சான்றிதழை வழங்கும். விதிமீறல் கண்டறியப்பட்டால் அத்தகைய தளங்களைத் தடை செய்யவும், அபராதம் விதிக்கவும் இந்த அமைப்புக்கு அதிகாரம் உண்டு.
புகார்கள்
புகார்களைத் தெரிவிக்கும் முறை
ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான புகார்களைப் பொதுமக்கள் 1930 என்ற சைபர் கிரைம் உதவி எண்ணிற்கு அழைத்துத் தெரிவிக்கலாம். மேலும், தவறான விளம்பரங்கள் மற்றும் மறைமுக விளம்பரங்களைத் தடுக்க நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கடுமையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. இ-ஸ்போர்ட்ஸ் மற்றும் கல்வி சார்ந்த சமூக விளையாட்டுகளில் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்க மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் சிறப்பு வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.