புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ரேஷன் கார்டு தர மத்திய, மாநில அரசுகள் மறுக்கக்கூடாது - உச்சநீதிமன்றம்
செய்தி முன்னோட்டம்
சமூக ஆர்வலர்கள் சிலர் சமீபத்தில் உச்ச நீதிமன்றத்தில் ஓர் மனுவினை தாக்கல் செய்துள்ளனர்.
அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது, இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ரேஷன் கார்டு தரப்படுவதில்லை.
தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ், மக்கள் விகிதம் சரியாக பராமரிக்கப்படவில்லை என்னும் காரணத்திற்காக அவர்களுக்கு ரேஷன் கார்டுகள் தரப்படுவதில்லை.
இதனால் அவர்களுக்கு ரேஷன் கார்டு கொடுக்க மத்திய அரசு மற்றும் மாநில அரசு மறுக்க கூடாது என்று உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. இந்த மனு அண்மையில் விசாரணைக்கும் ஏற்கப்பட்டது.
அதன்படி இந்த மனு மீதான விசாரணை நேற்று(ஏப்ரல்.,17) உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் எம்.ஆர்.ஷா., அசானுதீன், அமானுல்லா ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது.
ரேஷன் கார்டு
நாட்டின் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதில் புலம்பெயர் தொழிலாளர்கள் பங்கு அதிகம்
அப்போது மனுதாரர் குறித்த வாதத்தினை கேட்டறிந்த நீதிபதிகள் அதற்கான தீர்ப்பினையும் அளித்துள்ளார்கள்.
அவர்கள் அளித்துள்ள தீர்ப்பில், நாட்டின் உள்கட்டமைப்புகளை மேம்படுத்தும் பணிகளில் புலம்பெயர் தொழிலாளர்களின் பங்கு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
மக்கள் தொகை விகிதம் முறையாக பராமரிக்கப்படுவதில்லை என்னும் ஒரே காரணத்திற்காக மட்டும் அவர்களுக்கு ரேஷன் கார்டு வழங்க அனுமதி மறுக்க கூடாது.
பசியால் வாடுவோர் எங்கிருந்தாலும் அவர்களை தேடி சென்று அவர்களது பசியினை தீர்க்கவேண்டியது மத்திய மற்றும் மாநில அரசுகளின் கடமையாகும் என்று கூறியுள்ளனர்.
மேலும், தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ், மக்கள் விகிதம் சரியாக பராமரிக்கப்படவில்லை என்னும் காரணத்திற்காக அவர்களுக்கு ரேஷன் கார்டுகள் தர மறுக்க கூடாது என்று கூறி உத்தரவினை பிறப்பித்துள்ளார்கள்.