பிரபாகரன் சர்ச்சை: பழ.நெடுமாறனிடம் விசாரிக்க மத்திய, மாநில உளவு துறைகள் முடிவு
விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் உயிரோடு தான் இருக்கிறார் என்று பழ.நெடுமாறன் அறிவித்ததை அடுத்து, பிரபாகரன் பற்றிய தகவல்களை மீண்டும் திரட்ட மத்திய மற்றும் மாநில உளவு துறைகள் முடிவு செய்துள்ளன. மேலும், இது குறித்து பழ.நெடுமாறன் மற்றும் அவரது ஆதவாளர்களிடம் விசாரணை நடத்தவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர். இலங்கையின் விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் இறந்து விடவில்லை என்றும் அவர் நலமாக தான் இருக்கிறார் என்றும் நேற்று பழ.நெடுமாறன் "அதிகபூர்வமாக" அறிவித்தார். இதனையடுத்து, பெரும் சர்ச்சை கிளம்பியது. இப்படி ஒரு அறிவிப்பை புறந்தள்ளிவிட முடியாது என்பதால் இது குறித்து மேலும் விசாரணை நடத்த மத்திய உளவுத்துறை முடிவு செய்துள்ளது.
இலங்கை ராணுவம் திட்டவட்டமாக மறுப்பு
இந்த செய்தி வெளியானதும் இலங்கை ராணுவம் அதை முற்றிலுமாக மறுத்தது. மேலும், பிரபாகரன் குறித்த தகல்களை தமிழக க்யூ பிரிவு போலீஸாரும் திரட்ட தொடங்கி இருக்கின்றனர். உளவு பிரிவு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம், அந்த பிரிவின் ஐ.ஜி. செந்தில்வேலன், க்யூ பிரிவு எஸ்.பி. கண்ணம்மாள் ஆகியோர் தலைமையிலான குழு மீண்டும் விசாரணையில் இறங்கியுள்ளனர். பிரபாகரன் மரணமடைந்ததாக ஏற்கனவே திரட்டப்பட்ட ஆவணங்கள் அனைத்தும் மீண்டும் புலனாய்வு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இது குறித்து பழ.நெடுமாறன் மற்றும் அவரது ஆதரவாளர்களிடம் விசாரணை நடத்த உளவு துறை முடிவு செய்துள்ளது. மேலும், பழ.நெடுமாறன் மற்றும் அவரை சேர்ந்தவர்கள் தீவிர கண்காணிப்பு வளையத்திற்குள் வந்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த செய்தியை இலங்கை ராணுவம் திட்டவட்டமாக மறுதுள்ளது.