Loading...
பாகிஸ்தானின் 2 அழகு கிரீம்களுக்கு இந்தியாவில் தடை; ஆபத்தான வேதிப்பொருட்கள் குறித்து மத்திய அரசு எச்சரிக்கை
பாகிஸ்தானின் 2 அழகு கிரீம்களுக்கு இந்தியாவில் தடை

பாகிஸ்தானின் 2 அழகு கிரீம்களுக்கு இந்தியாவில் தடை; ஆபத்தான வேதிப்பொருட்கள் குறித்து மத்திய அரசு எச்சரிக்கை

எழுதியவர் Venkatalakshmi V
Sep 16, 2026
05:35 pm

செய்தி முன்னோட்டம்

பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்டு இந்தியாவில் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படும் இரண்டு பிரபல அழகு கிரீம்களுக்கு இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு வாரியம் (CDSCO) தடை விதித்து பொதுமக்களுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது. மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பான CDSCO வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'சாந்தினி ஒய்ட்னிங் கிரீம்' மற்றும் 'கோரி பியூட்டி கிரீம்' ஆகிய இரு தயாரிப்புகளிலும் மனித உடலுக்கு பெரும் தீங்கு விளைவிக்கும் கன உலோகங்கள் அனுமதிக்கப்பட்ட அளவை விட மிக அதிக அளவில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிப்புகள்

மனித உடலுக்கு ஏற்படும் தீவிர பாதிப்புகள்

இந்த அழகு கிரீம்களை தொடர்ந்து பயன்படுத்துவதால், சரும கோளாறுகள் ஏற்படுவதுடன், அவற்றில் உள்ள நச்சுத்தன்மை வாய்ந்த வேதிப்பொருட்கள் மற்றும் கன உலோகங்கள் உடலுக்குள் ஊடுருவி தீவிரமான ஆரோக்கியச் சிக்கல்களை உருவாக்கும் என மருந்துக் கட்டுப்பாட்டு வாரியம் எச்சரித்துள்ளது.

எனவே, பொதுமக்கள் இந்த பாகிஸ்தான் தயாரிப்புகளையோ அல்லது இது போன்ற பெயர்களைக் கொண்ட பிற கிரீம்களையோ வாங்க வேண்டாம் என்றும், ஏற்கனவே வாங்கியிருந்தால் உடனடியாக பயன்படுத்துவதை நிறுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

விதிகள்

இந்தியாவில் அழகு சாதனப் பொருட்களுக்கான விதிகள்

இந்தியாவில் அழகு சாதனப் பொருட்களின் பாதுகாப்பு மற்றும் தரத்திற்கான அளவுகோல்களை இந்திய தரநிலைப் பணியகம் (BIS) நிர்ணயித்துள்ளது.

இந்தியாவில் அழகு சாதனப் பொருட்களைத் தயாரித்து விற்பனை செய்ய மாநில உரிமம் வழங்கும் அதிகாரியிடம் உரிய உரிமம் பெற வேண்டும்.

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து அழகு சாதனப் பொருட்களும் மத்திய உரிமம் வழங்கும் அமைப்பிடம் கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டும்.

இந்த விதிமுறைகளை பின்பற்றாமல் போலி மற்றும் அனுமதியற்ற முறையில் சந்தைக்கு வரும் பொருட்களைத் தடுப்பதற்காகவே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

கவனிக்க வேண்டியவை

அழகு சாதன பொருட்கள் வாங்கும் முன் கவனிக்க வேண்டியவை

பொதுமக்கள் அழகு சாதன பொருட்களை வாங்கும் போது கீழ்க்கண்ட விபரங்களை பேக்கேஜிங்கில் சரிபார்க்க வேண்டும் என CDSCO அறிவுறுத்தியுள்ளது:

1. தயாரிப்பு உரிம எண் மற்றும் தயாரிப்பாளரின் முழு விவரங்கள்.

2. பேட்ச் எண், உற்பத்தி செய்யப்பட்ட தேதி மற்றும் காலாவதி தேதி.

3. வெளிநாட்டுப் பொருட்களாக இருந்தால், மத்திய அரசின் இறக்குமதி பதிவு எண் உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

ADVERTISEMENT