மருந்து நிறுவனங்களுக்கு இறுதி எச்சரிக்கை: ஜனவரி 1, 2026க்குள் இது கட்டாயம்; மத்திய அரசு கெடு
செய்தி முன்னோட்டம்
இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட நச்சுக் கலந்த இருமல் மருந்துகள் பல நாடுகளில் உள்ள குழந்தைகளின் மரணத்துடன் இணைக்கப்பட்ட உலகளாவிய சர்ச்சைகளுக்குப் பிறகு, மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (CDSCO) கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. அதன்படி, இந்தியாவில் உள்ள அனைத்து மருந்து உற்பத்தி நிறுவனங்களும் ஜனவரி 1, 2026 க்குள் உலகளாவிய நல்ல உற்பத்தி நடைமுறைகள் (GMP - Good Manufacturing Practices) விதிகளுக்குக் கட்டாயம் இணங்க வேண்டும். இல்லையெனில் உற்பத்தி நிறுத்தப்படும் என எச்சரித்துள்ளது. மேலும், காலக்கெடு நீட்டிக்கப்படாது எனவும் திட்டவட்டமாகக் கூறியுள்ளது. ₹250 கோடிக்குக் குறைவான ஆண்டு வருமானம் கொண்ட சுமார் 1,470 மருந்து உற்பத்தி ஆலைகள் திருத்தப்பட்ட 'Schedule M' GMP தரநிலைகளுக்கு மாறுவதற்கு அவகாசம் கோரியிருந்தன.
அவகாசம்
ஜனவரி 1 வரை அவகாசம்
இந்த நிறுவனங்களுக்கு 2026 ஜனவரி 1 வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. இப்போது, இந்தத் தேதிக்குப் பிறகு எந்தவிதச் சலுகையும் அனுமதிக்கப்படாது என்று CDSCO இறுதி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுவரை, இந்தியாவின் 5,308 மருந்து உற்பத்தி நிறுவனங்களில் சுமார் 3,838 குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSME) மேம்படுத்தப்பட்ட விதிமுறைகளுக்கு இணங்கிவிட்டன. மீதமுள்ள 1,470 நிறுவனங்கள் உடனடியாகத் தங்கள் செயல்பாடுகளை மேம்படுத்த வேண்டும், இல்லையெனில் அவை மூடப்படும் என்ற அழுத்தத்தை எதிர்கொண்டுள்ளன. இந்த நடவடிக்கை, உலக சுகாதார நிறுவனம் (WHO) நிர்ணயித்த தரங்களுக்கு இணங்க, மூலப்பொருட்களின் கண்காணிப்பு மற்றும் தரக் கட்டுப்பாடு ஆகியவற்றை உறுதிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.