LOADING...
2031 முதல் CBSE 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் இனி 3 மொழிகள் படிக்கவேண்டும்
10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மூன்று மொழிகளை கட்டாயமாக்கத் திட்டமிட்டுள்ளது CBSE

2031 முதல் CBSE 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் இனி 3 மொழிகள் படிக்கவேண்டும்

எழுதியவர் Venkatalakshmi V
Apr 03, 2026
11:39 am

செய்தி முன்னோட்டம்

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE), தேசியக் கல்விக் கொள்கை 2020-ன் (NEP 2020) பரிந்துரைகளைச் செயல்படுத்தும் விதமாக, 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மூன்று மொழிகளை கட்டாயமாக்கத் திட்டமிட்டுள்ளது. தற்போதைய நடைமுறைப்படி மாணவர்கள் இரண்டு மொழிகளை படித்து வரும் நிலையில், 2031-32 கல்வியாண்டு முதல் மாணவர்கள் மூன்று மொழிகளைக் கற்க வேண்டியது அவசியமாகிறது. இதில் குறைந்தது இரண்டு மொழிகள் இந்திய மொழிகளாக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அதிரடி மாற்றமானது மாணவர்களின் பன்மொழித் திறனை மேம்படுத்தும் நோக்கில் கொண்டுவரப்படுகிறது.

மும்மொழித் கொள்கை

மும்மொழி கொள்கையும் புதிய கல்விச் சட்டமும்

தேசியக் கல்விக் கொள்கையின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ள இந்த புதிய பாடத்திட்டக் கட்டமைப்பு (NCF), பள்ளி கல்வியில் இந்திய மொழிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. தற்போது 9 மற்றும் 10-ஆம் வகுப்பு மாணவர்கள் இரண்டு மொழிகளைப் படித்து வருகின்றனர். ஆனால், புதிய விதிகளின்படி ஒரு கூடுதல் மொழியை மாணவர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். இந்த மூன்று மொழிகளில் இரண்டு மொழிகள் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட மொழிகளாக இருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது மாணவர்களிடையே இந்திய கலாச்சாரம் மற்றும் மொழிப்பற்றை வளர்க்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமலாக்கம்

2031-க்குள் படிப்படியான அமலாக்கம்

இந்த மாற்றம் உடனடியாக அமலுக்கு வராமல், வரும் ஆண்டுகளில் படிப்படியாக செயல்படுத்தப்பட உள்ளது. 2031-ஆம் ஆண்டு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இந்த விதிமுறை முழுமையாக பொருந்தும். சிபிஎஸ்இ வாரியம் இதற்கான பாடத்திட்டங்களை வகுப்பதிலும், ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிப்பதிலும் ஏற்கனவே கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளது. மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான ஒரு வெளிநாட்டு மொழியை (உதாரணமாக பிரெஞ்சு அல்லது ஜெர்மன்) மூன்றாவது மொழியாக தேர்ந்தெடுக்க வாய்ப்பு இருந்தாலும், முதல் இரண்டு மொழிகள் இந்திய மொழிகளாகவே இருக்க வேண்டும் என்பதில் வாரியம் உறுதியாக உள்ளது.

Advertisement

கூடுதல் பாடங்கள்

கூடுதல் பாடங்கள் மற்றும் தேர்ச்சி விதிகள்

மூன்று மொழிகள் தவிர, மாணவர்கள் கணிதம், அறிவியல், சமூக அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் கல்வி உள்ளிட்ட இதர பாடங்களையும் படிக்க வேண்டும். தற்போதைய ஐந்து பாடங்களுக்குப் பதிலாக, மாணவர்கள் மொத்தம் பத்து பாடங்களைப் படிக்க வேண்டிய சூழல் உருவாகலாம் எனத் தெரிகிறது. அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றால் மட்டுமே மாணவர்களுக்குப் பொதுத்தேர்வு சான்றிதழ் வழங்கப்படும். இந்த கூடுதல் சுமை மாணவர்களிடையே கலவையான விமர்சனங்களை ஏற்படுத்தினாலும், சர்வதேச அளவில் பன்மொழித் திறன் ஒரு கூடுதல் தகுதியாகப் பார்க்கப்படுவதால் இது வரவேற்பையும் பெற்றுள்ளது.

Advertisement