இன்று முதல் CBSE 10-ஆம் வகுப்பு தேர்வுகள் தொடக்கம்; புதிய தேர்வு முறை, தகுதி விதிகள் குறித்து அனைத்தும்
செய்தி முன்னோட்டம்
CBSE, 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு இன்று முதல் தொடங்கவுள்ளது. அதில் குறிப்பாக, 2026-ஆம் ஆண்டு முதல் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் புதிய வடிவம் நடைமுறைக்கு வரவுள்ளது. மாணவர்கள் இருமுறை பொதுத்தேர்வு எழுதலாம் என்ற புதிய விதி அமல்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்த முக்கிய விளக்கங்களை தற்போது CBSE அளித்துள்ளது. இரண்டு முறை தேர்வுகள் நடத்தப்படும் நிலையில், மாணவர்கள் மற்றும் பெற்றோரிடையே நிலவிய குழப்பங்களுக்கு தீர்வாக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இரண்டாம் தேர்வு
யார் இரண்டாம் தேர்வை எழுத முடியும்?
இரண்டாம் கட்டப் பொதுத்தேர்வு என்பது அனைத்து மாணவர்களுக்குமானது அல்ல. குறிப்பிட்ட சில பிரிவினருக்கு மட்டுமே இதில் அனுமதி உண்டு: Improvement: முதல் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள், அறிவியல், கணிதம், சமூக அறிவியல் மற்றும் மொழிகள் உள்ளிட்ட மூன்று பாடங்களில் தங்கள் மதிப்பெண்களை உயர்த்த மீண்டும் தேர்வு எழுதலாம். Compartment: முதல் தேர்வில் ஒரு பாடத்தில் தோல்வியடைந்தவர்கள் அல்லது 'கம்பார்ட்மென்ட்' பிரிவில் வருபவர்கள். பாடம் மாற்றுதல்: ஏற்கனவே தேர்ச்சி பெற்றிருந்தாலும், ஒரு குறிப்பிட்ட பாடத்திற்குப் பதில் வேறொரு பாடத்தை மாற்ற/ அல்லது மதிப்பெண்ணை கூட்ட விரும்புபவர்கள்.
நிபந்தனைகள்
மாணவர்களுக்கான முக்கிய நிபந்தனைகள்
சிபிஎஸ்இ-யின் விளக்கப்படி, முதல் பொதுத்தேர்வை எழுதுவது அனைத்து மாணவர்களுக்கும் கட்டாயம். ஒருவேளை தனிப்பட்ட அல்லது மருத்துவ காரணங்களால் முதல் தேர்வில் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட பாடங்களை எழுதத் தவறும் மாணவர்கள், இரண்டாம் தேர்வை எழுத தகுதியற்றவர்கள் ஆவார்கள். அவர்கள் 'Essential Repeat' பிரிவில் வைக்கப்பட்டு, அடுத்த ஆண்டு பிப்ரவரியில் மட்டுமே மீண்டும் தேர்வு எழுத முடியும். முதல் தேர்வில் பல பாடங்களைத் தவிர்ப்பது ஒரு மாணவரின் கல்வி ஆண்டையே வீணடிக்கக்கூடும் என வாரியம் எச்சரித்துள்ளது. மேலும், 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பிறகு தனியாக கூடுதல் பாடங்களை எழுத அனுமதி கிடையாது. எனவே, மாணவர்கள் முதல் தேர்விலேயே அனைத்து பாடங்களையும் எழுதுவதை உறுதி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.