₹5 லட்சம் லஞ்ச வழக்கில் 2 அமலாக்கத்துறை அதிகாரிகளை கைது செய்தது சிபிஐ
செய்தி முன்னோட்டம்
உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள அமலாக்கத்துறை மண்டல அலுவலகத்தில் பணியாற்றி வந்த அமலாக்கத்துறை அதிகாரி தீபக் குமார் மற்றும் தலைமை காவலர் மனோஜ் த்விவேதி ஆகிய இருவரை மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) வெள்ளிக்கிழமை (அக்டோபர் 23) கைது செய்துள்ளது. புகார்தாரரின் தந்தைக்கு எதிராக நிலுவையில் உள்ள அமலாக்கத்துறை வழக்கில் சாதகமாக செயல்பட ₹5 லட்சம் லஞ்சம் கேட்ட குற்றச்சாட்டின் கீழ் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிபிஐ அமைத்த ரகசிய பொறியில் இவர்கள் கையும் களவுமாக சிக்கினர்.
சிபிஐ ரகசிய பொறி
சிபிஐ அமைத்த ரகசிய பொறி மற்றும் கையும் களவுமாக பிடிபட்ட சம்பவம்
ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் அமலாக்கத்துறையிடம் இருந்து சம்மன் பெற்ற புகார்தாரரின் தந்தையிடம், வழக்கு விசாரணையில் சலுகை காட்ட தலைமை காவலர் லஞ்சம் கேட்டுள்ளார்.
இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், சிபிஐ அதிகாரிகள் அக்டோபர் 23 அன்று வழக்குப் பதிவு செய்து பொறி வைத்தனர்.
அமலாக்கத்துறை அதிகாரிக்காகத் தலைமை காவலர் மனோஜ் த்விவேதி ₹5 லட்சம் லஞ்சப் பணத்தை பெற்றபோது சிபிஐ அதிகாரிகளால் கையும் களவுமாக பிடிக்கப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
சைபர் கிரைம்
₹1.04 கோடி சர்வதேச சைபர் மோசடி வழக்கில் முக்கியப் புள்ளி கைது
மற்றொரு முக்கிய நடவடிக்கையாக, கேரளாவின் கோழிக்கோடு தமரச்சேரியை சேர்ந்த முகமது ஃபசல் கே என்பவரை சர்வதேச சைபர் கிரைம் மற்றும் ஏடிஎம் கார்டு கடத்தல் வழக்கில் சிபிஐ கைது செய்துள்ளது.
கடந்த ஜூலை 2024-இல் திருச்சூரை சேர்ந்த ஒருவரிடம் ஃபெட்எக்ஸ் மற்றும் சைபர் கிரைம் போலீஸ் அதிகாரிகள் போலப் பேசி ₹1.04 கோடி மோசடி செய்யப்பட்ட வழக்கின் பின்னணியில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வங்கி சரிபார்ப்பு எனக் கூறிப் பாதிக்கப்பட்டவரிடமிருந்து மோசடி கும்பல் பணத்தைப் பறித்துள்ளது.
தங்கத்தில் முதலீடு
ஏடிஎம் கார்டுகள் கடத்தல் மற்றும் தங்கத்தில் முதலீடு செய்யப்பட்ட விபரம்
சிபிஐ நடத்திய விசாரணையில், இளைஞர்கள் மற்றும் மாணவர்களிடமிருந்து தலா ₹3,000 முதல் ₹7,000 கொடுத்து டெபிட் கார்டுகளை வாங்கி துபாய்க்கு கடத்திய சர்வதேச கும்பலுடன் முகமது ஃபசலுக்குத் தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டது.
வெளிநாடுகளில் உள்ள கூட்டாளிகள் இந்த கார்டுகளை பயன்படுத்தி சைபர் மோசடிப் பணத்தைத் திரும்பப் பெற்றுள்ளனர்.
அந்தப் பணத்தை இந்தியாவில் ரியல் எஸ்டேட் மற்றும் கேரளாவிற்குத் தங்கம் கடத்துவதில் முதலீடு செய்துள்ளனர்.
முன்னதாக ஷார்ஜா தப்ப முயன்றபோது பெங்களூரு விமான நிலையத்தில் இவர் தடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.