தமிழகத்திற்கு காவிரிநீரை திறந்துவிட இயலாது - மத்திய அமைச்சருக்கு சித்தராமையா கடிதம்
தமிழ்நாடு மாநிலத்திற்கு அடுத்த 15 நாட்களுக்கு காவிரியில் இருந்து வினாடிக்கு 5,000கன அடி நீர் திறந்துவிட வேண்டும் என்று கடந்த 12ம் தேதி டெல்லியில் நடந்த காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் கர்நாடகா அரசிடம் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அம்மாநில முதல்வர் சித்தராமையா மத்திய ஜல் சக்தித்துறை அமைச்சரான கஜேந்திர சிங்ஷெகாவத்திற்கு கடிதம் ஒன்றினை எழுதியுள்ளார் என்று கூறப்படுகிறது. அந்த கடிதத்தில், "காவிரி ஒழுங்காற்று குழு தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் இருந்து மேலும் 15 நாட்களுக்கு வினாடிக்கு 5,000கன அடி நீர் திறந்துவிடும்படி பரிந்துரைத்துள்ளது" என்பதனை குறிப்பிட்டுள்ளார்.
உரிய நடவடிக்கையினை மேற்கொள்ளும்படி கோரிக்கை
மேலும் அவர் அதில், காவிரி அணைகளில் உள்ள நீரானது கர்நாடகா மாநில மக்களின் குடிநீர் தேவைக்கும், மாநில விவசாயிகளின் பாசனத்திற்கும் மட்டுமே போதுமானதாக உள்ளது. அதனால் காவிரியில் இருந்து தமிழகத்திற்கு நீர் திறந்துவிட முடியாது. அதுமட்டும்மல்லாமல் தமிழகத்தில் உள்ள அணைகளில் இங்குள்ள நீரின் அளவினை விட அதிகமாகவே உள்ளது. எனவே இதுகுறித்து உரிய நடவடிக்கையினை உடனடியாக எடுக்கும்படி கேட்டுக்கொள்வதாக கடிதத்தில் கூறியுள்ளார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது இயல்பாக பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதால் இந்தாண்டு தமிழகத்திற்கு தண்ணீர் பிரச்சனை இருக்காது. எனவே, இதனை கவனத்தில் வைத்துக்கொண்டு தக்க உத்தரவினை பிறப்பிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.