திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம்
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்குள் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. பஞ்சபூத ஸ்தலங்களுள் அக்னி ஸ்தலமாகவும் நினைத்தாலே முக்தி அளிக்கக்கூடிய திருத்தலமாகவும் விளங்குவது திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில். இங்கு தினமும் வெளி மாவட்டம், வெளி மாநிலம் மற்றும் வெளி நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். இதற்கிடையே இக்கோயிலில் பணியாற்றுவதற்காக சுமார் 200க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடவேண்டியவை. இந்நிலையில் அண்ணாமலையார் கோயிலின் 3ம் பிரகாரத்தில் உள்ள அண்ணாமலையார் பாதம் கோபுரத்திற்கு அருகில் உள்ள இடத்தில் பிறந்தநாள் கொண்டாட்டம் நடந்தது சர்ச்சையினை ஏற்படுத்தியுள்ளது.
அண்ணாமலையார் கோயிலில் அடுத்தடுத்த சர்ச்சை நிகழ்வுகள்
அண்ணாமலையார் கோயிலில் பணிபுரியும் அப்பு என்னும் ஊழியருக்கு இன்று பிறந்த நாள். அதனை முன்னிட்டு கோயில் வளாகத்திற்குள்ளேயே கேக் வெட்டி சக ஊழியர்கள் பிறந்தநாளினை கொண்டாடியுள்ளார்கள். இந்த நிகழ்வானது வீடியோவாக பதிவு செய்யப்பட்டு இணையத்திலும் பகிரப்பட்டுள்ளது. தற்போது இந்த வீடியோவினை பார்த்து அனைவரும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளார்கள். முன்னதாக நேற்று திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மேத்யூ கார்மெண்ட்ஸ் என்னும் நிறுவனம் தனது சார்பில் விபூதி பாக்கெட்டுகளை நன்கொடையாக வழங்கியுள்ளது. அந்த பாக்கெட்டில் இந்த நிறுவனத்தின் பெயர் இருந்துள்ள நிலையில், கூடவே அதில் அன்னை தெரசாவின் புகைப்படமும் இடம்பெற்றிருந்தது. இது பெரும் சர்ச்சையான நிலையில் சம்பந்தப்பட்ட குருக்கள் 2 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.