'2024 பொது தேர்தலுக்கு முன்பு குடியுரிமை சட்டம் அமல்படுத்தப்படும்': அமித்ஷா
2019 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட குடியுரிமை(திருத்தம்) சட்டம்(சிஏஏ) இந்த ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக அமல்படுத்தப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று தெரிவித்தார். "நமது முஸ்லிம் சகோதரர்கள் தவறாக வழிநடத்தப்படுகிறார்கள் மற்றும் சிஏஏக்கு எதிராக தூண்டப்படுகிறார்கள். பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசத்தில் துன்புறுத்தலுக்கு உள்ளாகி இந்தியாவிற்கு வந்தவர்களுக்கு குடியுரிமை வழங்குவதற்காக மட்டுமே சிஏஏ உள்ளது. இது யாருடைய இந்திய குடியுரிமையையும் பறிப்பதற்காக அல்ல," என்று அவர் கூறினார். வரும் தேர்தலில் பாஜக 370 இடங்களையும், தேசிய ஜனநாயக கூட்டணி 400 இடங்களையும் பெற்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும் என்றும் மத்திய அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 400 இடங்கள் கிடைக்கும்
"மக்களவை தேர்தலின் முடிவு குறித்து எந்த சஸ்பென்ஸும் இல்லை. காங்கிரஸ் மற்றும் பிற எதிர்க்கட்சிகள் கூட தாங்கள் மீண்டும் எதிர்க்கட்சி பெஞ்சில் அமர வேண்டும் என்பதை உணர்ந்துவிட்டார்கள்." என்று அமித்ஷா தெரிவித்துள்ளார். "அரசியலமைப்புச் சட்டத்தின் 370வது பிரிவை(ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய பிரிவு) நாங்கள் ரத்து செய்துள்ளோம். எனவே நாட்டு மக்கள் பாஜகவுக்கு 370 இடங்களையும், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 400 இடங்களையும் வழங்குவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம். " என்று அமித்ஷா கூறியுள்ளார்.