குடியுரிமை திருத்தச்சட்ட இறுதி வரைவு அடுத்த மார்ச் மாதத்திற்குள் தயாராகும் என அறிவிப்பு
குடியுரிமை(திருத்தம்) சட்டத்தின்(CAA) இறுதி வரைவு அடுத்த ஆண்டு மார்ச் 30 க்குள் தயாராக இருக்கும் என்று மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா நேற்று தெரிவித்துள்ளார். நேற்று வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டம் தாக்கூர்நகரில் வைத்து மட்டுவா சமூகத்தினரிடம் உரையாற்றிய இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா இதை தெரிவித்துள்ளார். இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா உத்தரபிரதேசத்தில் உள்ள கெரி தொகுதியை சேர்ந்த பாஜக எம்.பி ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று மட்டுவா சமூகத்தினரிடம் உரையாற்றிய அவர், அந்த சமூகத்தின் குடியுரிமை உரிமைகளை யாராலும் பறிக்க முடியாது என்றும், 2019இல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை(திருத்தம்) சட்டத்தின் மூலம் அவர்களும் இந்த நாட்டின் குடிமக்களாக மாறினர் என்றும் கூறினார்.
மட்டுவா சமூகத்தினருக்கு குடியுரிமை உறுதி
"உங்களுக்கு குடியுரிமைக்கான முழு உரிமையும் கிடைக்கும். முறையான ஆவணங்கள் உங்களிடம் இல்லாமல் இருந்தாலும், உங்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. அதையும் நாங்கள் சட்டத்தில் சேர்த்துள்ளோம்," என்று இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா அந்த கூட்டத்தில் கூறினார். நேற்று நடந்த அந்த கூட்டத்தில் கப்பல் துறை இணை அமைச்சரும், பொங்கான் பாஜக எம்பியுமான சாந்தனு தாக்கூரும் கலந்து கொண்டார். "கடந்த இரண்டு ஆண்டுகளில் CAA-ஐ நடைமுறைப்படுத்துவதற்கான செயல்முறை வேகம் பெற்றுள்ளது... சில சிக்கல்கள் தீர்க்கப்பட்டு வருகின்றன. மட்டுவா சமூகத்தினரிடமிருந்து குடியுரிமை உரிமைகளை யாரும் பறிக்க முடியாது. அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள், CAA இன் இறுதி வரைவு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது." என்றும் இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா கூறியுள்ளார்.