இடைத்தேர்தல் முடிவுகள்: 13 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது
ஏழு மாநிலங்களில் உள்ள 13 சட்டசபை தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. ஜூலை 10-ம் தேதி நடத்தப்பட்ட இடைத்தேர்தல், மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு நடைபெறும் முதல் தேர்தலாகும். பதவியில் இருந்த உறுப்பினர்கள் உயிரிழந்தால் அல்லது ராஜினாமா செய்தால் அவர்களது தொகுதியில் இடை தேர்தல் நடத்தப்பட்டு அடுத்த உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்நிலையில், பீகார், மேற்கு வங்கம், தமிழ்நாடு, மத்தியப் பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப் மற்றும் இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தற்போது இடைதேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது
ஏழு மாநிலங்களில் உள்ள சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்
மேற்கு வங்கத்தில் உள்ள ராய்கஞ்ச், ரணகாட் தக்சின், பாக்தா மற்றும் மணிக்தலா; உத்தரகாண்டில் பத்ரிநாத் மற்றும் மங்களூர்; பஞ்சாபில் ஜலந்தர் மேற்கு; இமாச்சலப் பிரதேசத்தில் டேஹ்ரா, ஹமிர்பூர் மற்றும் நலகர்; பீகாரில் ரூபாலி; தமிழ்நாட்டில் விக்கிரவாண்டி; மற்றும் மத்திய பிரதேசத்தில் அமர்வாரா ஆகிய ஏழு மாநிலங்களில் உள்ள சட்டமன்றத் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற்றுள்ளது. இவற்றில் நான்கு மாநிலங்கள் இந்தியா கூட்டணி கட்சிகளால் ஆட்சி செய்யப்படுகின்றன. மீதமுள்ளவை பாரதிய ஜனதா கட்சி (BJP) அல்லது தேசிய ஜனநாயகக் கூட்டணி(NDA) அரசாங்கத்தைக் கொண்டுள்ளன. மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சி (பாஜக) ஆகிய இரு கட்சிகளுக்கும் சரிசமமாக போட்டியிட்டு வருகின்றன.